5 மணிநேரத்துக்கு கம்மியா தூங்குறீங்களா? உங்க ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?
இன்றைய நவீன யுகத்தில் தூக்கமின்மை என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தூங்காமல் இருந்தால் ஆயுளில் பல ஆண்டுகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

Sleep and Life Expectancy
கடுமையான பணிச்சுமை, வேலையினால் ஏற்படும் மன அழுத்தம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, மாறிவிட்ட வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் பலரும் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். குறைவாக தூங்குவது அல்லது தூக்கமின்மை ஆயுளை கணிசமாக குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாம் தினமும் போதுமான அளவு தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கும். குறைவான தூக்கம் ஆயுளை குறிப்பிட்ட அளவு குறைக்கும் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், தூக்கமின்மை காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்கள் உடல் நலக்கோளாறுகளுக்கு வழி வகுத்து ஆயுட்காலத்தை குறைக்கிறது.
தூக்கமின்மையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்
சரியாக தூங்காதவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. நீண்டகால தூக்கமின்மை கரோனரி தமனி டைல்சிபிகேஷன் என்கிற அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்க்கான முக்கிய காரணமாகும். சரியாக தூங்காதவவர்களுக்கு இன்சுலின் உணர் திறன் குறைந்து ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும். குறைவான தூக்கம் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் மற்றும் கிரெடின் ஆகிய ஹார்மோன்களில் சமநிலை இன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக பசி ஏற்பட்டு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் பருமன் நாள்பட்ட நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.
தூக்கமின்மை ஏற்படுத்தும் பின்விளைவுகள்
சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு சில புற்று நோய்களின் அபாயமும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தி பலவீனமடைய செய்து புற்றுநோய் செல்கள் வளரவும் வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களும் ஏற்படும். மனச்சோர்வு, எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு தற்கொலை எண்ணங்களும் அதிகரிக்கும். குறைந்த நேரமே தூங்குபவர்களுக்கு முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவை வெகுவாக குறைகிறது. இதனால் வேலை செய்யும் இடத்தில் ஆபத்துகள் மற்றும் பிற சூழல்கள் ஏற்படுகிறது. ஆழ்ந்த தூக்கம் நிறைவாற்றலை ஒருங்கிணைக்க உதவுகிறது. தூக்கமின்மை நினைவாற்றல் குறைபாடுகளுக்கும், மூளை சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கலாம்.
குறைவான தூக்கம் கொண்டவர்களுக்கு ஆயுள் குறையும்
இது மட்டுமல்லாமல் நாள்பட்ட தலைவலி, உடல் வீக்கம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. பல்வேறு ஆய்வுகள் தினமும் 7 முதல் 9 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு அகால மரண ஆபத்து இருப்பதாக கூறுகின்றது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் நல்ல தூக்கப்பழக்கம் இருப்பவர்களுக்கு எந்த காரணத்தினாலும் ஏற்படும் மரண ஆபத்து 30% குறைவாகவும், இதய நோயால் இறக்கும் ஆபத்து 21% குறைவாகவும் இருப்பதாக கூறியுள்ளது. சில ஆய்வுகள் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இறப்பு ஆபத்து 15% வரை அதிகரிக்கலாம் என்று கூறுகிறது. அதே நேரத்தில் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களுக்கும் மரணத்தின் அபாயம் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தூக்கமின்மையால் இழக்கப்படும் ஆயுள்
ஒரு குறிப்பிட்ட நபர் தூக்கமின்மையால் எவ்வளவு ஆயுளை இழப்பார் என்று துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லை. ஏனெனில் இது தனி நபர்களின் உடல்நலம், வாழ்க்கை முறை மற்றும் தூக்கமின்மையின் தீவிரத்தை பொறுத்தது. நல்ல தூக்க பழக்க வழக்கங்கள் கொண்ட ஆண்கள் சராசரியாக 4.7 ஆண்டுகள் கூடுதலாகவும், பெண்கள் 2.4 ஆண்டுகள் கூடுதலாகவும் வாழ முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. குறைந்த தூக்கம் என்பது ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒரு காரணியாகும். இது பல்வேறு நோய்களுக்கும் உடல் நலக்கோளாறுகளுக்கும் வழிவகுத்து வாழ்க்கை தரத்தையும், ஆயுளையும் வெகுவாக குறைக்கிறது. எனவே போதுமான நேரம் தூங்குவது என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கும், நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கும்.