உலகமே போற்றும் கணிதமேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று | #GeniusRamanujan
Death anniversary of genius Ramanujan: கணித மேதையாக கொண்டாடப்படும் சீனிவாச ராமானுஜன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 26) நினைவுகூரப்படுகிறது.
கணக்கு பாடம் என்றாலே பலருக்கும் கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். நம்மில் பலர் கணக்கு பாடத்தை பயிலும்போது, எந்த சூத்திரமோ, என்ன விடையோ என்று நினைத்திருப்போம். ஆனால் ஸ்ரீனிவாச ராமானுஜன் கணக்கு பாடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியவர். மேதை என்ற சொல்லில் கூட அவரை அடக்கிவிடமுடியாது. கணிதத்தில் பல அரும்சாதனைகளை செய்தவர். அவரின் சில நினைவுகளின் பகிர்வு தான் இந்தத் தொகுப்பு.
ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு என்றாலும், வளர்ந்தது, கல்வி பயின்றது எல்லாம் கும்பகோணத்தில் தான். இவருடைய தந்தை துணிக்கடையில் சாதாரண கணக்கராக இருந்தார். இளம் வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தாய் கோமளவள்ளி ராமானுஜனை பராமரித்து கொண்டிருந்தார். கோயிலில் கணக்கு போட்டு விடை தேடி அலையும் ராமானுஜத்தை தேடுவதே அவருக்கு வேலையாகி போனது. ஒரு முறை ஆசிரியர் வகுப்பில் ஜீரோவுக்கு மதிப்பு இல்லை என்றிருக்கிறார். வெடுக்கென எழுந்த ராமானுஜம் ஆனால் 1 எண்ணுடைய பின்னால் பூஜ்யம் வரும்போது மதிப்பு பெறுகிறதே! என சொல்லியுள்ளார். இதை சொல்லும் போது அவருக்கு 10 வயதுக்குள்ளாக தான் இருந்தது.
கல்லூரி காலத்தில் ராமானுஜன் தன் கணித தாகத்தை தீர்த்து கொண்டார். அப்போது ஏழ்மையின் காரணமாக காகிதங்கள் வாங்க அவருக்கு பணமில்லை. அதனால் சிலேட்டில் தேற்றங்களையும், கணக்குகளையும் எழுதி பார்த்து கொள்வார். முடிவுகள் கிடைத்ததும் அதை நோட்டில் குறித்து கொள்வாராம். என்னதான் கணக்கில் புலியாக இருந்தாலும், அவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு செய்துள்ளது. கும்பகோணம் அரசு கல்லூரியில் 1903 ஆம் ஆண்டு படித்தார். அப்போது 3 முறை ஆங்கில பாடத்தில் மட்டும் மதிப்பெண்கள் கைவிடவே, பட்டம் வாங்க முடியாமல் திணறியுள்ளார். பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு மாறிவிட்டார். இங்கு தான் ஒரு திருப்புமுனை கிடைத்தது. இங்கு சிங்கார முதலியாரை சந்தித்த பின்னர், ஏராளமான கணித சூத்திரங்கள், நூல்களை கற்று தேர்ந்தார். இவருடைய கணக்குகள் பிரபலமாகின. கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் கிடைத்தது. அப்போது தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத ராமானுஜத்திற்கு எல்லோரும் பரிந்துரைத்தார்கள்.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தகவல்களின்படி, சீனிவாச ராமானுஜனுடைய முதல் கட்டுரை 1911 ஆம் ஆண்டு இந்திய கணித சங்கத்தின் இதழில் வெளியாகியுள்ளது. உதவித்தொகை மூலமாக 1914 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் படிப்பை மேற்கொள்ள சென்றார். அதன் பின்னர் ஹார்டி என்பவரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டார் ராமானுஜன். அவர் ராமானுஜத்தை உலகறிய செய்தார். கணித மேதை ராமானுஜத்தின் தேற்றங்கள் எளிமையானவை அல்ல. அவை கணினியில் பயன்படுத்தும் அளவுக்கு மதிப்புள்ளவை. அவைகள் Computer Algorithms-இல் உபயோகம் ஆகிவருகிறது. எண்கோட்பாடுகள் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகள் ஆகியவற்றில் அளப்பரிய கண்டுபிடிப்புகள் ராமானுஜத்தினுடையது என்றால் மிகையல்ல. இவரின் கணித கோட்பாடுகள் இயற்பியற் துறை தொடங்கி மின்தொடர்புப் பொறியியல் துறை வரைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு சாப்பாடு இலவசம்.. இப்படி ஒரு வசதி இருப்பது தெரியுமா?
கணிதத்திற்காகவே வாழ்ந்த ராமானுஜன் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி காசநோய் பாதிப்பால் தன்னுடைய 33 வயதில் மரணம் எய்தினார். அவருடைய மரணம் துயரமயமானது. அந்த காலக்கட்டதில் கடல் கடந்து செல்லும் நபர்களை ஜாதி விலக்கு செய்யும் பழக்கம் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இருந்தது. இந்த காரணத்தால் ராமானுஜத்திற்கு இறுதி சடங்கு செய்ய கூட யாரும் முன்வரவில்லை. அப்போதைய இந்து இதழ் ஆசிரியரின் முயற்சியின் பலனாக ஒருவர் முன்வந்து, எல்லா சடங்கையும் செய்தார். இன்று நம்மிடையே கணித மாமேதை என்று கொண்டாடப்படும் ராமானுஜத்தை, வெறும் ஆறேழு பேர்களே சுடுகாடுக்கு கொண்டு சென்றனர். எல்லா காலத்திலும் கலைஞர்களும், மேதைகளும் சாகும் காலங்களில் மோசமான விஷயங்களையே சந்திக்கின்றனர். அதில் ராமானுஜமும் விதிவிலக்கில்லை.
கணித உலகின் விடிவெள்ளியாக ஜொலிக்கும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று!
இதையும் படிங்க: காலையில் ஈறுகளில் ரத்தம் கசியுதா? பல் துலக்கும்போது இதை கவனிச்சு பாருங்க!!