Growing a Beard is Safe? தாடி வளர்ப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவரா? இதை படியுங்க முதலில்
தாடி வளர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Growing a Beard is Safe?
முந்தைய காலங்களில் தாடி வளர்ப்பு என்பது சுகாதார சீர்கேடாக பார்க்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி மனிதர்கள் தினசரி ஷேவிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் தாடி இல்லாதவர்களை வித்தியாசமாக பார்க்கும் பழக்கம் உள்ளது. இளம்பெண்கள் கூட தாடி வைத்த ஆண்களையே பிடிப்பதாக டிரெண்ட் செய்து வருகின்றனர். சில நேரங்களில் சிலரை தாடியுடன் பார்க்கும் பொழுது அவர்கள் அதிக வசீகரமாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் தாடி வளர்ப்பது முகத்தில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை கிருமிகள் வாழ வழிவகை செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தாடி சுகாதாரம் குறித்து கிளம்பிய விவாதம்
பொதுவாகவே மனிதர்களின் சருமங்களில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை கிருமிகள் எளிதில் பரவ வாய்ப்பு உண்டு. குறிப்பாக சருமத்தில் இருக்கும் ரோமங்கள் இவை வளர தோதான இடமாக இருக்கிறது. அந்த வகையில் தாடி என்பது ஒரு அடர்த்தியான முடிப் பகுதியாக உள்ளது. இதில் உணவுத் துகள்கள், தூசி, வியர்வை, இறந்த தோல் செல்கள் ஆகியவை படியும் வாய்ப்பு அதிகம். இது பாக்டீரியாக்களுக்கு ஒரு இனப்பெருக்க சூழலை ஏற்படுத்தலாம். குறிப்பாக சில ஆய்வு முடிவுகள் தாடியில் கிருமிகள் செழித்து வளரும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கட்டுரையில் தாடியில் கழிவறையில் இருப்பதைவிட அதிக அளவில் கிருமிகள் இருப்பதாக கூறியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாக்டீரியாக்களின் புகலிடமாக விளங்கும் தாடி
முன்பு நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தாடியில் மலம் சார்ந்த பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மோசமான சுகாதார பழக்கவழக்கங்களே. வெளியில் சென்ற பின் கைகளை கழுவாமல் முகம் அல்லது தாடியை தொடுவது, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை கழுவாமல் இருப்பது மற்றும் பிற காரணங்கள் காரணமாக தாடியில் இவ்வகை பாக்டீரியாக்கள் வளரலாம். தாடியில் இருக்கும் ரோமங்கள் முகத்தை பலமுறை தழுவிய பின்னரும் பாக்டீரியாக்களை வெளியே செல்ல விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. தாடி வைத்திருப்பது பாக்டீரியாக்களின் புகலிடம் என்றும், அது சருமத் தொற்றுகளுக்கும் காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
மருத்துவமனை சூழலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தாடி வைத்திருந்தவர்களின் முகத்தில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு தாடியில் நாயின் ரோமங்களில் இருப்பதைவிட அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பது MRI ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் மற்றொரு ஆய்வில் கிளீன் ஷேவ் செய்த ஆண்கள் முகத்தில் இருக்கும் கிருமிகளின் அளவிலும், தாடி வைத்திருக்கும் ஆண்களின் முகத்தில் உள்ள கிருமிகளின் அளவிலும் பெரிய ஒரு வித்தியாசம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாடி வைத்திருக்கும் மருத்துவர்கள் முகமூடி அணிந்து கொண்டு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இம்பெட்டிகோ பிரச்சனை
தாடி வைத்திருக்கும் சிலருக்கு இம்பெட்டிகோ என்கிற தொற்று ஏற்படக்கூடும். சில அரிதான சந்தர்ப்பங்களில் இடுப்பு பகுதியில் வாழும் பியூபிக் லைஸ் போன்ற அந்தரங்க பேன் ஒட்டுண்ணிகள் தாடி, புருவம் அல்லது கண் இமைகளிலும் தோன்றக்கூடும். குறிப்பாக சுகாதாரம் குறைவாக இருப்பவர்கள், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கும் பொழுது இது ஏற்படலாம். தாடி வைத்திருப்பது அசுத்தமானது என்பதை விட அதன் சுத்தத்தை பராமரிப்பது முக்கியம். தினசரி தாடியை கழுவ வேண்டும். இதற்கு மிருதுவான ஷாம்பு அல்லது சோப்பு பயன்படுத்தலாம். இது தாடியில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய், இறந்த செல்களை நீக்க உதவும். தாடியை கழுவியப் பின்னர் நன்கு உலர்த்தி ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
தாடி பராமரிப்பு அவசியம்
தலையை சீவுவது போல தாடியையும் சீப்பு கொண்டு சீவ வேண்டும். இது இறந்த முடிகளை அகற்றவும், தாடியில் படிந்திருக்கும் தூசு, துகள்களை நீக்கவும் உதவும். வெளியில் சென்ற பின், கழிவறை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு அதன் பின்னரே முகம் மற்றும் தாடியை தொட வேண்டும். தாடியை அடிக்கடி வடிவமைத்து பராமரித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாடியில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என்றாலும் தனிப்பட்ட சுகாதார பழக்க வழக்கங்கள் பராமரிக்கும் முறை ஆகியவற்றை பொறுத்து இது நபருக்கு நபர் வேறுபடலாம். முறையாக பராமரிக்கப்படும் நிலையில் தாடி சுகாதார ரீதியாக பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை. எனவே தாடியை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.