செட்டிநாடு நண்டு கிரேவி...நினைக்கும் போதே சாப்பிடத் தூண்டும் சுவையில் செய்வது எப்படி?
சுத்தம் செய்யவும் சாப்பிடவும் கஷ்டம் என்பதால் பலர் நண்டை தவிர்ப்பார்கள். ஆனால், செட்டிநாடு மெனுவில் முக்கிய இடம்பிடிக்கும் இதில் சத்துக்கள் அதிகம். சளி, இருமல் இருந்தால் நண்டு சமைத்து சாப்பிடுங்கள்; மருத்துவரிடமே செல்ல வேண்டியிருக்காது.

செட்டிநாடு நண்டு கிரேவி...
காரசாரமான அசைவ உணவுகளுக்குப் பெயர் பெற்றது செட்டிநாடு சமையல் முறை. அதிலும் குறிப்பாக, கடல் உணவுகளில் நண்டும் செட்டிநாடு மசாலாவும் இணையும் போது அதன் சுவை அலாதியானது. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படும் நண்டை, வழக்கமான முறையில் செய்யாமல், செட்டிநாடு பாரம்பரியம் மாறாமல், அதே சமயம் சில புதிய சமையல் நுணுக்கங்களோடு சமைப்பது எப்படி? நண்டின் சதைப்பகுதி கரையாமல், மசாலாக்கள் உள்ளே வரை இறங்கி, நாவைச் சுண்டி இழுக்கும் "செட்டிநாடு நண்டு கிரேவி" செய்வதற்கான பிரத்யேக மற்றும் முற்றிலும் புதிய சுவாரஸ்யமான டிப்ஸ் இதோ!
நண்டு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :
கிரேவிக்கு எப்போதுமே மண்பானை நண்டு அல்லது கடல் நண்டு (Blue Crab) சிறந்த தேர்வாகும். நண்டின் எடை கைகளில் தூக்கும் போது கனமாக இருக்க வேண்டும். லேசாக இருந்தால் அதில் சதைப்பகுதி குறைவாகவும், தண்ணீர் அதிகமாகவும் இருக்கும். பெண் நண்டுகளில் சதைப்பகுதி அதிகமாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.
வாசனை தரும் வறுத்து அரைக்கும் மசாலா :
செட்டிநாடு சுவையின் ரகசியமே அப்போதே வறுத்து அரைக்கும் ஃபிரஷான மசாலாவில் தான் உள்ளது. வெறும் கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றுடன் இரண்டு சுருள் பட்டை மற்றும் ஒரு கல்பாசி (Stone Flower) சேர்த்து வதக்க வேண்டும். கல்பாசிதான் செட்டிநாடு சமையலின் பிரதான வாசனையைத் தரும். இவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்காமல், கொரகொரப்பாக (Coarse powder) அரைக்க வேண்டும்.
நண்டின் காரத்தை ஈடுகட்டும் சின்ன வெங்காயம் :
இந்த கிரேவிக்கு பெரிய வெங்காயத்தைத் தவிர்த்து, முற்றிலும் சின்ன வெங்காயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சின்ன வெங்காயம் நண்டின் அதிகப்படியான உஷ்ணத்தைக் குறைப்பதோடு, கிரேவிக்கு ஒரு லேசான இனிப்புச் சுவையைக் கொடுத்து, காரத்தை நாக்கில் உறைக்காமல் சமன் செய்யும்.
கவுச்சி வாசனையைப் போக்க மோர் மசாலா :
நண்டைக் கழுவிய பின்பும் ஒருவித கவுச்சி வாசனை இருக்கும். அதனைப் போக்க, சமைப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன், நண்டுத் துண்டுகளில் சிறிது கெட்டி மோர், மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் தடவி ஊற வைக்க வேண்டும். இது கவுச்சி வாசனையை முற்றிலும் நீக்குவதுடன், நண்டு சதைப்பகுதியை மென்மையாக்கும்.
சமையல் எண்ணெய் மற்றும் தக்காளி பக்குவம் :
செட்டிநாடு சமையலுக்கு செக்கு நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தக்காளி அதிகமாகச் சேர்த்தால் கிரேவி புளிப்பாகிவிடும். எனவே, இரண்டு பங்கு வெங்காயத்திற்கு ஒரு பங்கு தக்காளி என்ற விகிதமே சரியானது. தக்காளி எண்ணெயில் நன்றாக வதங்கி, தொக்கு பதத்திற்கு வந்த பிறகே நண்டைச் சேர்க்க வேண்டும்.
ரகசிய டிப்ஸ்: நண்டைச் சேர்த்த பிறகு அதிக நேரம் கிளறக் கூடாது; இதனால் கால்கள் உடைந்து சதை வெளியேறிவிடும். நண்டு வெந்து அதன் ஓடு சாம்பல் நிறத்தில் இருந்து ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக மாறும் போது, கிரேவியில் தடிமனுக்காக சிறிது முந்திரிப் பருப்புடன் சோம்பு சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் ஹோட்டல் தரத்திலான செட்டிநாடு நண்டு கிரேவி தயார்! முந்திரி பருப்பு வேண்டாம் என்பவர்கள் சிறிதளவு தேங்காய் துருவல், கசகசா அல்லது வெங்காயம் மற்றும் தக்காளி அரைத்த விழுந்தினை சேர்த்தும் செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

