- Home
- Lifestyle
- Heart Attack : ஷாம்பூ பாட்டில்களால் மாரடைப்பு ஏற்படுமா? - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
Heart Attack : ஷாம்பூ பாட்டில்களால் மாரடைப்பு ஏற்படுமா? - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் நம் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி மரணத்திற்கு வழி வகுக்கும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பொருள்கள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Shampoo Bottles Cause Heart Attacks
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் இதயத்தை பலவீனப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருள் நாம் அதிகம் பயன்படுத்தும் ஷாம்பூ, மேக்கப் பொருட்கள், சமையலறை பொருட்களில் இருக்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. eBiomedicine என்கிற இதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வின் முடிவில் சுற்றுச்சூழலுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பிளாஸ்டிக், நம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. பித்தலேட்டுகள் எனப்படும் வேதிப்பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் நம் உடலுக்குள் சென்று மரணத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பித்தலேட்டுகளால் காத்திருக்கும் பேராபத்து
பிளாஸ்டிக் பொருட்கள் நமது சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் என்று பல ஆண்டு காலமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மென்மையானதாகவும், நீண்ட நாள் உழைப்பதற்காகவும் அதில் பித்தலேட்டுகள் எனப்படும் ஒரு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதர்களின் உடலில் சேரும்போது ஆண்களின் இனப்பெருக்க திறனை குறைக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, டெஸ்டிரோஸ்டோன் அளவையும் குறைத்து பிறப்புறுப்பில் குறைபாட்டை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஆஸ்துமா, குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக மரணங்களை ஏற்படுத்திய பித்தலேட்டுகள்
இந்த நிலையில் இந்த பித்தலேட்டுகள் இதய தமனிகளில் வீக்கத்தை ஏற்படுத்தி மாரடைப்பு வர காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 55 வயது முதல் 64 வயதினருக்கு இதய நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் 13.5% மரணங்களுக்கு இந்த வேதிப்பொருட்கள் காரணமாக இருந்ததாக ஆய்வில் கூறப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 200 நாடுகளில் 3.5 லட்சம் மரணங்களுக்கு பித்தலேட்டுகள் காரணமாக இருந்துள்ளன. பசிபிக், கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா ஆகிய நாடுகளில் பித்தலேட்டுகளால் ஏற்படும் மரணங்களில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. ஆப்பிரிக்காவில் இதய பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களில் 30% பித்தலேட்டுகள் காரணமாக அமைந்தன.
பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் பித்தலேட்டுகள்
நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான லியனார்டோ ட்ரசாண்டே மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வில் பித்தலேட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் 98% இறப்புகளுக்கு நெகிழிப் பயன்பாடு தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளால் அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு, மோசமான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வேதிப்பொருட்கள் பெரும்பாலும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் மூலக்கூறுகளுடன் உணவுப் பொருட்கள் ஒட்டாமல் இருப்பதற்காகவும், பிளாஸ்டிக்கிற்கு மென்மை, நெகிழ்வுத் தன்மை, நீண்ட நாள் உழைக்கும் தன்மையை வழங்குவதற்கும் இந்த வேதிப்பொருள் பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படுகிறது.
பித்தலேட்டுகள் உடலில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் என்ன?
பிளாஸ்டிக்கால் ஆன பாட்டில்க,ள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ், உணவை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டு டைல்ஸ், வயர், கேபிள், அழகுப் பொருட்கள், ஷாம்பூ பாட்டில்கள் என பல பொருட்கள் வழியாக இந்த வேதிப்பொருள் நம் உடலுக்கு செல்கிறது. குறிப்பாக சுவாசப் பாதை, வாய் மற்றும் தோல் வழியாக நம் உடலுக்குள் பித்தலேட்டுகள் கலக்கத் தொடங்குகிறது. எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வேதிப்பொருள் கருவுற்றிருக்கும் தாய் மூலம் குழந்தைக்கு அடைந்து, குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதில் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், விதைப்பை, விந்தணுக்களில் பிரச்சனை, கருமுட்டை வளர்ச்சியில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விலங்குகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் விதைப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், புராஸ்டேட் சுரப்பி நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
பித்தலேட்டுகள் உடலில் சேராமல் தவிர்ப்பது எப்படி?
அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதே இதற்கு தீர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைப்பது, பிளாஸ்டிக் கவர்களில் சுற்றுவது, உணவுத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் உணவில் இந்த வேதிப்பொருட்கள் கலக்கிறது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த, சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதன் மூலம் இது உடலுக்குள் எளிதாக கலக்கிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டியது அவசியம். பிவிசி பிளாஸ்டிக்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக மர விளையாட்டுப் பொருட்களை விளையாட கொடுக்க வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்களை பிளாஸ்டிக் அல்லாத பொருட்களாக பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கு மாற்றாக செராமிக், எவர் சில்வர் கண்ணாடிப் பொருட்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலே இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மால் முழுமையாக விடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.