வெற லெவல்... வெள்ள மீட்புப் பணியில் அசத்திய மோப்ப நாய்கள் சாரா, ஜான்ஸி, ஒப்பனா!
உத்தரகண்ட் நிலச்சரிவில், மீட்புப் பணிகளில் ராணுவ மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாரா, ஒப்பனா, ஜான்சி ஆகிய நாய்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடித்து உயிர்களைக் காக்கின்றன. இவை மீரட்டில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளன.

மீட்புப் பணியில் மோப்ப நாய் குழுக்கள்
உத்தரகண்ட் மாநிலம், ஹர்சில் பகுதியில் உள்ள தாராலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு வெள்ளப் பேரழிவுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் ஒன்பது சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய் குழுக்கள் (Canine Unit), மீட்புப் பணிகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
இந்தக் குழுவில் உள்ள, 3 வயதுடைய சாரா (302B Sara), இரண்டரை வயதுடைய ஒப்பனா (341B Opana) மற்றும் 2 வயதுடைய ஜான்சி (414B Jansi) ஆகிய மூன்று மோப்ப நாய்கள், மீட்புப் பணியின் முன்னணியில் இருந்து செயல்படுகின்றன.
இந்த மூன்று நாய்களும் மீரட்டில் உள்ள ரிமவுண்ட் வெட்னரி கார்ப்ஸ் சென்டர் மற்றும் கல்லூரி-யில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிகளை முடித்துள்ளன. மனிதர்கள் செல்ல முடியாத இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில், இந்த நாய்கள் சிறப்பாகச் செயல்படும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
சவாலான சூழலில் சிறப்புப் பணி
மிகவும் கடினமான வானிலை மற்றும் உயரமான மலைப் பகுதிகளில், இந்த நாய்கள் தங்களின் மோப்பத் திறமை, சுறுசுறுப்பு மற்றும் தாங்கும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றன. அவை நிலச்சரிவால் ஏற்பட்ட சேதம், ஆழமான சேறு மற்றும் இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கியிருந்தவர்களைக் கண்டுபிடிப்பதிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதிலும் உதவி செய்கின்றன.
மோப்ப நாய்களின் சிறப்பான கீழ்ப்படிதலும், அவற்றுக்கு பயிற்சி அளித்தவர்களின் கட்டளைகளுக்கு உடனடியாகக் கட்டுப்படுவதும், மீட்புப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய உதவியுள்ளன. இந்த நாய்களின் பங்களிப்பு, மீட்பு நடவடிக்கைகளில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான கனமழை, மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பு மற்றும் அணுக முடியாத இடங்கள் எனப் பல சவால்கள் இருந்தபோதிலும், சாரா, ஒப்பனா மற்றும் ஜான்சி ஆகியவை தங்கள் பணியில் கவனம் செலுத்தி, உயிர்களைக் காப்பாற்றுவதிலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் அயராது உழைக்கின்றன.
பேரிடர் மேலாண்மைப் பணிகள்
இந்திய ராணுவம், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகளில், இந்தச் சிறப்பு மோப்ப நாய்களின் திறமையைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது. பேரழிவு காலங்களில் தேசத்திற்குத் தேவைப்படும் நேரத்தில் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட, சிறப்புத் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என்பதை இந்த மோப்ப நாய்களின் செயல்பாடு உறுதிப்படுத்துகிறது.
இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை மீண்டும் ஏற்படுத்தவும் ராணுவம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க உதவும்.