அப்பாடா! தெரு நாய்கள் தொல்லை இனி இருக்காது! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தெரு நாய்களின் தொல்லை இனி அதிகம் இருக்காது.

Tamil Nadu Government Euthanizes Stray Dogs
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. பெண்கள், குழந்தைகளை துரத்தி துரத்தி கடிக்கும் தெரு நாய்கள் சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக விளங்கி வருகின்றன. சென்னையிலும் தெரு நாய்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இரவு நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியாத நிலை இருந்து வந்தது. ஆகையால் தமிழ்நாடு அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.
தமிழ்நாட்டில் தெரு நாய்கள் தொல்லை
இந்த பிரச்சனைக்கு தீர்பு காண்பது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நல்லதொரு மாற்றத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை
மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைக்க இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள் இக்காப்பகங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
முக்கிய முடிவு எடுத்த மு.க.ஸ்டாலின்
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், இத்துடன் இணைந்து 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
தெரு நாய்கள் கருணைக் கொலை
இந்நிலையில், நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று கால்நடைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.