இன்றைய TOP 10 செய்திகள்: டீ, காபி விலை உயர்வு முதல் டிஜிபி நியமன சர்ச்சை வரை
சென்னையில் டீ, காபி விலை உயர்வு, புதிய டிஜிபி நியமனம், சீன அதிபருடன் மோடி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு செய்திகள் இன்றைய TOP 10 தொகுப்பில்.

டீ, காபி விலை அதிரடி உயர்வு
சென்னையில் நாளை (செப்டம்பர் 1) முதல் ஒரு கிளாஸ் டீ 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், ஒரு கிளாஸ் காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல் பால், லெமன் டீ 15 ரூபாயாகவும், ஸ்பெஷல் டீ, ராகி மால்ட் மற்றும் சுக்கு காபி 20 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஒரு கிளாஸ் பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகியவை ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்
தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். மத்திய அரசின் பரிந்துரை பட்டியல் இன்னும் வராத நிலையில், வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. வெங்கட்ராமன் டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில், இப்போது பொறுப்பு டிஜிபியாகி உள்ளார்.
சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்?
தமிழக காவல்துறைக்கு புதிய பொறுப்பு டிஜிபி நியமனத்தில், திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
டிராகனும் யானையும் சேர்ந்தா மாஸ் தான்!
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் உறவு குறித்தும், உலகளாவிய நிலைப்பாடு குறித்தும் இருவரும் விரிவாகப் பேசினர்.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி...
NARI 2025 அறிக்கையின்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. 31 நகரங்களில் 21-வது இடத்தைப் பிடித்துள்ள சென்னை, தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ளது. பாதுகாப்பான உள்கட்டமைப்பு, கடுமையான நடவடிக்கைகள் தேவை என ஆய்வு கூறுகிறது.
50% வரி விதிப்புக்கு இதுதான் காரணமா?
அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தனது பெயரைப் பரிந்துரைக்க மோடி மறுத்ததால், இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்பின் நோபல் பரிசு ஆசையும் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஹமாஸுக்குப் பேரிடி!
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, 21 மாதங்களாக இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபெய்டா இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று அறிவித்துள்ளார்.
செம மழை கொட்டித் தீர்க்க போகுது!
இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கம் போலவே அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் வெள்ளம், மேக வெடிப்பு, நிலச்சரிவு எனப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஒவ்வொரு இந்தியரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்திய அணிக்கு வரும் தோனி?
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக பொறுப்பேற்க முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், IPLயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.