ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்குத் தாலிபன்கள் மீண்டும் தடை விதித்துள்ளனர். ரகசியமாகச் செயல்படும் நிலையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அழகு நிலையங்களை மூடுமாறு தாலிபான்கள் மீண்டும் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்குப் பணியாத அழகு நிலைய உரிமையாளர்களுக்குக் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023-ல் அழகு நிலையங்களை மூட தாலிபான்கள் உத்தரவிட்ட பின்னரும், சில அழகு நிலையங்கள் ரகசியமாகச் செயல்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரகசிய அழகு நிலையங்களுக்குத் தடை:
2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து, இஸ்லாமியச் சட்டத்தின் தங்கள் விளக்கத்தின்படி, பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கும், வேலைக்குச் செல்வதற்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முடி திருத்துதல், ஒப்பனை செய்தல் போன்ற சேவைகளை வழங்கும் அழகு நிலையங்கள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது என்று தாலிபான்கள் கருதுகின்றனர்.
தி கார்டியன் நாளிதழின் அறிக்கையின்படி, தாலிபான்கள் இந்த ரகசிய அழகு நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை "தீமைகளைத் தடுக்கும்" காவல்துறையிடம் புகார் செய்யுமாறு சமூகத் தலைவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
வேதனைக்குள்ளான பெண்கள்:
இது குறித்து தி கார்டியனுக்குப் பேட்டியளித்த 38 வயதான ஃபிரெஸ்தா என்பவர், "தாலிபான்கள் எங்கள் அழகு நிலையங்களை மூடியபோது, என் குடும்பத்தில் நான் மட்டும்தான் வேலைக்குச் சென்றேன். என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், நான் எனது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது" என்று கூறியுள்ளார்.
"அழகு நிலையங்கள் மூடப்பட்டபோது, நான் என் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவராக இருந்தேன். இருந்தாலும், நான் தொடர்ந்து ரகசியமாக வேலை செய்தேன். ஏனெனில், ஒரு பெண்ணுக்கு அழகைக் கொண்டு வரும்போது நான் நன்றாக உணர்கிறேன். ஒரு பெண் கண்ணாடியில் தன்னைப் பார்த்துச் சிரிக்கும்போது, அவளது மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சியாக மாறிவிடும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
"இப்போது, இந்த ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் இந்த உலகில் எங்கள் குரலைக் கேட்கவோ அல்லது எங்களுக்கு ஆதரவளிக்கவோ யாரும் இல்லை" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
