இன்றைய TOP 10 செய்திகள்: தவெக கொடிக்கம்பம் சரிவு... அமித் ஷா தாக்கல் செய்த மசோதா!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் யாகம் வளர்க்கப்பட்டது, மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்தது, மதுரையில் டாஸ்மாக் மூடல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது, அமித் ஷா தாக்கல் செய்த சர்ச்சைக்குரிய மசோதா உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ…

யாகம் வளர்த்த தவெகவினர்
தவெக மாநாட்டில் எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் விஜய்யும், தவெகவினரும் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி மாநாட்டு திடலில் தவெகவினர் யாகம் வளர்த்தனர். இதில் தவெகவின் பொதுச்செயளாலர் புஸ்ஸி ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொணடனர். நாளை மாநாடு நடக்கும்போது மழை வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெகவினர் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.
100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்தது
தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் தவெகவின் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மசோதாக்கள், கடுமையான குற்ற வழக்குகளில் 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அளிக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
"மசோதாவை திரும்பப் பெறு" என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு, அவையில் குழப்பம் நிலவியது. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்பியது
கனமழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்பியுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?
நடிகர் சூர்யா அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் பரவிய வதந்திகளை அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மறுத்துள்ளது. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த சூர்யா அறிவுறுத்தியுள்ளாராம்.
உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மசோதா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜனாதிபதியின் கேள்விகள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். ஆளுநரின் அதிகாரம், மாநில அரசுகளின் சட்டமியற்றும் உரிமை குறித்த விவாதம் எழுந்தது.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1137 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுகாக வழங்கப்பட வேண்டிய ரூ.1137 கோடியை ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ரோகித் சர்மா, விராட் கோலி பெயர் நீக்கம்
ஓடிஐ ரேங்க் லிஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா, கோலி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதற்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
தற்போது, ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே இவர்கள் விளையாடும் ஒரே சர்வதேச வடிவமாக உள்ளது. இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் இவர்களின் பெயர்கள் இல்லாதது, இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளனர் என்ற புரளியை தூண்டியது.
டாஸ்மாக் விடுமுறை வாபஸ்
தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி மதுரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டது.
திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பங்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வளையங்குளம், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 14 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை மாநாடு நடைபெறும் நாளில் மூட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.
இந்த மசோதா இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பிறகு சட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோர் அல்லது அதில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.