திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடி திருட்டு? CBCID விசாரணையால் கதறும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் எழுந்துள்ளது.

திருப்பதி உண்டியல் ஊழல் வழக்கு
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திருட்டு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி ஆந்திர அரசுக்கு சொந்தமான திருமலை தேவஸ்தானம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டியுள்ளது.
சி. வி. ரவிக்குமார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல வருடங்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த சி.வி. ரவிக்குமார் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு பரகாமணி பகுதியில் இருந்து 112 அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தபோது விஜிலென்ஸ் அதிகாரிகளால் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்த டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில், ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை திருமலை தேவஸ்தானம் எழுதி வாங்கியது. அப்போதைய அதிகாரிகளின் சமரசத்தால், இந்த வழக்கு லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டு, ரவிக்குமார் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெளிநாட்டு டாலர்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மறுவிசாரணை கோரிக்கை
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த பானுபிரகாஷ், கடந்த ஆட்சியில் நடந்த உண்டியல் காணிக்கை திருட்டு குறித்து மறுவிசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தேவஸ்தானம், லோக் அதாலத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆளும் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருட்டு விவகாரத்தில், ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்து விவரங்களும் மிகத் தெளிவாக இருக்கும் நிலையில், சந்திரபாபு நாயுடுவும், லோகேஷும் உண்மையை திரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், "இங்கு மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் எப்படி ஆன்மீக தலங்களின் பெயர்களை, அவரது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை புனைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்" என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.