- Home
- இந்தியா
- என்ன பெரிய சீனா! பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகும் மெட்ரோ ரயில்! எப்படி இயங்கும் தெரியுமா?
என்ன பெரிய சீனா! பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடப்போகும் மெட்ரோ ரயில்! எப்படி இயங்கும் தெரியுமா?
பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் ஓட்டுநர் இல்லாமல் எப்படி இயங்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

Driverless Metro Trains In Bengaluru
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், ஜெய்ப்பூர், குருகிராம், மும்பை, நொய்டா, கொச்சி, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் தீராத தலைவலியாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில்கள் அருமருந்தாக உள்ளன. குறிப்பாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் மக்களுக்கு பெருமளவில் கைகொடுத்து உதவுகின்றன.
பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்
இந்தியாவின் ஹைடெக் நகரான பெங்களூருவில் வைட்ஃபீல்டு (கடுகோடி) முதல் செல்லகட்டா வரையிலான பர்பிள் லைனிலும், மாதவரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரை கிரீன் லைனிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தை (Yellow Line) திறந்து வைக்கிறார். இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயங்க உள்ளன. அதாவது இந்த ரயில்கள் மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் எப்படி இயங்கும்?
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் கணினி அடிப்படையிலான தன்னியக்க அமைப்பு (Automated System) மூலம் இயக்கப்படுகின்றன. இந்த அமைப்பு ரயில் இயக்கத்தின் வேகம், நிறுத்தம், கதவுகளைத் திறப்பது மற்றும் மூடுவது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு (CBTC)ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயங்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
விபத்துகள் தவிர்க்கப்படும்
இந்த தொழில்நுட்பம் ரயில்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையம் இடையே தொடர்ச்சியான தகவல்தொடர்பை உறுதி செய்கிறது. இது ரயில்களின் சரியான இருப்பிடம் மற்றும் வேகத்தை எப்போதும் தெரிந்து கொள்ள உதவுகிறது. இதனால் ரயில்கள் ஒன்றுக்கொன்று பாதுகாப்பான இடைவெளியில் இயங்க முடியும். இதன்மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும். தொழில்நுட்பத்தின் உதவியால் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன.
ஒரே பாதையில் 2 ரயில்கள் வந்தால்???
அதாவது தவறுதலாக ஒரே பாதையில் இரண்டு மெட்ரோல் ரயில்கள் வந்தால் தொழில்நுட்பட்பத்தின் உதவியுடன் சென்சார் அடிப்படையில் அந்த ரயில்கள் தானாக குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பே நின்று விடும். இதனால் ரயில்கள் மோதல் தவிர்க்கப்படும். ஆகையால் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இதில் மிகவும் குறைவு.
மேலும் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை வெகுவாக குறைக்கும். இந்தியாவில் ஏற்கெனவே டெல்லி மெட்ரோவில் மெஜந்தா மற்றும் பிங்க் வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

