சென்னையில் கேரளாவை போல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம். 

Water Metro Project In Chennai: நாட்டில் மும்பைக்கு அடுத்தபடியாக பெரு நகரமாக விளங்கி வரும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக உள்ளது. மக்கள் தொகைக்கு போட்டியாக வாகனங்களும் பெருகி விட்டதால் சென்னையில் என்னதான் பாலங்கள் கட்டினாலும், மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. மாலை 6 மணிக்கு வேலை முடிந்தாலும் டிராபிக் ஜாமில் மணிக்கணக்கில் சிக்கித் தவித்து இரவு 10 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும் கேரளாவை போல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் அடையாறு ஆற்றில் செயல்படுத்தப்படும் எனவும் நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வரையிலான வழித்தடத்தில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம்

இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நீர்வளத்துறை, மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகிய 3 துறைகள் இணைந்து வரும் 6ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளன. அதன்பிறகு இது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரலாம்.

முதற்கட்டமாக 20 கிமீ தொலைவுக்கு இயக்கம்

இந்த வாட்டர் மெட்ரோ சேவையானது, தினசரி பயணம் செய்பவர்களுக்கு ஒரு மாற்றுப் போக்குவரத்து வழியாக இருப்பது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் கவரும் என தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கிறது. சென்னை வாட்டர் மெட்ரோ திட்டம் முதற்கட்டமாக சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் 'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளாவில் உள்ள கொச்சி நகரில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம் கடந்த 2023ம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கொச்சி மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கேரள அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் படகு சேவை செயலப்படுத்தப்பட்டு வருகிறது. கேராளவில் காயல்கள், ஆறுகள் அதிகம் உள்ளதால் அங்கு படகு போக்குவரத்தை தொடர்ந்து நடத்துவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

சென்னையில் உள்ள சவால்கள்

ஆனால் தமிழ்நாடு குறிப்பாக சென்னை கேரளாவுக்கு நேர் எதிராக உள்ளாது. அடையாறு ஆற்றின் ஆழமின்மை, ஆக்கிரமிப்புகள் மற்றும் மாசுபாடு போன்றவற்றை வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் சவாலாக இருக்கும். இவையெல்லாம் ஆராய்ந்தபிறகே இந்த திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.