லட்சத்தீவு கடலில் நீந்திய பிரதமர் மோடி... இயற்கை அழகை ரசித்து போட்ட நெகிழ்ச்சி பதிவு..
பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவில் ஸ்நோர்கெல்லிங் செய்த புகைப்படங்களை தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி ஜனவரி 2ஆம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Modi
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவில் ஸ்நோர்கெல்லிங் செய்த புகைப்படங்களை தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்நோர்கெல்லிங் என்பது வாயில் ஒரு குழாயை வைத்து சுவாசித்து கொண்டு கடலில் நீந்தும் ஒரு முறையாகும்.
லட்சத்தீவின் அமைதியான கடற்கரையில் காலை நடைபயிற்சி செல்வது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். "அழகான கடற்கரைகள் வழியாக அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்வது "தூய்மையான பேரின்பத்தின் தருணங்கள்" என்பதை நிரூபித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Modi
கடலோரத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமர் “ 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை அளித்தது” என்று தெரிவித்தார்..
நீருக்கடியில் எடுக்கப்பட்ட படங்களையும், அவர் ஸ்நோர்கெலிங்கிற்குச் சென்றபோது பார்த்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் காட்டும் படங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
அகத்தி, பங்காரம் மற்றும் கவரட்டியில் வசிப்பவர்களுடன் உரையாடிய பிரதமர், அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார். லட்சத்தீவுக்கான தனது பயணம் "கற்றல் மற்றும் வளர்ச்சியின் வளமான பயணம்" என்றும் அவர் கூறினார்.
மேலும் புதிய சாகசங்களை செய்ய விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும் என்றும் தான் இங்கு ஸ்நோர்கெல்லிங் செய்தது மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.