- Home
- இந்தியா
- இனி முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்கம்.! அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய அரசு
இனி முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்கம்.! அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய அரசு
தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

அமைச்சர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு
அமலாக்கத்துறை பல்வேறு மாநிலங்களில் சோதனைகளில் ஈடுபட்டு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அந்த வகையில் டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அமைச்சர்களையும் அமலாக்கத்துறை கைது செய்தது.
இதனையடுத்து சிறையிலேயே பல மாதங்கள் முதலமைச்சராகவும். அமைச்சராகவும் தொடர்ந்தனர். பல மாதங்களுக்கு பிறகே தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் இதற்கு செக் வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.
30 நாட்களில் பதவி நீக்கம்
அந்த வகையில் பிரதமர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
அதனை தொடர்ந்து இந்த மசோதா கூட்டு குழுவின் பரிசீலனைக்காகவும் அனுப்பப்பட உள்ளது. தற்போது பிரதமரோ அல்லது மாநில முதல்வர்களோ மத்திய அமைச்சர்களோ அல்லது மாநில அமைச்சர்களோ தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்த விதமான சட்ட வழிமுறைகளும் இல்லை.
புதிய சட்டத்தை அறிமுகம் செய்யும் அமித்ஷா
இந்த நிலையில் தான் தீவிரமான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் பிரதமரோ மத்திய அமைச்சரோ மாநில முதல்வர்கள் அல்லது மாநில அமைச்சர்களோ கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்களை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க இந்த மசோதா வகை செய்கிறது.
31 வது நாள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தானாகவே அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, தற்போதைய சட்டத்தில் பொருத்தமான ஏற்பாடு எதுவும் இல்லை என்றும், எனவே 1963 சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மசோதா குறிப்பிடுகிறது