வெற லெவல் டெக்னாலஜி! நவி மும்பையில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் விமான நிலையம்!
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையமான நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் சுமார் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

நவி மும்பை விமான நிலையம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையமான நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (Navi Mumbai International Airport - NMIA) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
மும்பைக்குப் பெருமை
சுமார் ரூ.19,650 கோடி செலவில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையின் விமானப் பயண நெரிசலைத் தணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லண்டன், நியூயார்க், டோக்கியோ போன்ற உலகின் சில நகரங்களைப் போலவே, மும்பையும் தற்போது இரண்டு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட பெருமைக்குரிய நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
டிசம்பரில் வர்த்தக செயல்பாடுகள் தொக்கம்
இந்த விமான நிலையத்தின் வர்த்தக செயல்பாடுகள் டிசம்பர் 2025-இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டும் இயங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் தொடங்கிய பிறகு, மொத்த போக்குவரத்தில் சுமார் 40% சர்வதேச போக்குவரத்தாக இருக்கும் என்றும், இது படிப்படியாக 75% வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான டிஜிட்டல் விமான நிலையம்
நவி மும்பை விமான நிலையத்தின் முக்கிய சிறப்பம்சம், இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையம் (fully digital airport) ஆகும். இந்த விமான நிலையம் முழுமையாக தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முனையத்தைக் கொண்டுள்ளது.
பயணிகளுக்கு அதிநவீன வசதிகள்
வாகனம் நிறுத்துமிடங்களை (Parking Slots) முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்தல், பொருட்களை ஆன்லைனில் ஒப்படைக்கும் (Online Baggage Drop) சேவை, குடிவரவு (Immigration) சேவைகளுக்கான ஆன்லைன் வசதிகள் போன்ற அதிநவீன ஏற்பாடுகள் நவி மும்பை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்ச திறன் மற்றும் வேலைவாய்ப்பு
நான்கு முனையங்கள் மற்றும் இரண்டு ஓடுபாதைகள் என முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டால், இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 155 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், இந்த பிரம்மாண்ட திட்டம், விமானப் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு துறைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து மையம்
நவி மும்பை விமான நிலையம், இந்தியாவின் முக்கிய விமான மையங்களில் (Aviation Hub) முதன்முதலாக பல்வேறு போக்குவரத்து அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளது. இதில் அதிவேக நெடுஞ்சாலைகள் (Expressways), மெட்ரோ ரயில், புறநகர் ரயில் வலைப்பின்னல்கள் மற்றும் நீர்வழிச் சேவைகள் ஆகியவை அடங்கும்.
ஏற்கனவே, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.