இந்தியாவில் மாவட்டம் தோறும் 5G நெட்வொர்க் வந்துருச்சு! பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி 9வது இந்திய மொபைல் காங்கிரஸ் 2025-ஐ தொடங்கி வைத்தார். 5G முதல் 6G வரையிலான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னிறைவை பறைசாற்றுகிறது என்றும் கூறினார்.

இந்திய மொபைல் காங்கிரஸ் 2025
9வது இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) புது டெல்லியில் உள்ள யசோபூமியில் தொடங்கி வைத்தார். 'மாற்றத்திற்காக புதுமைப்படுத்துதல்' (Innovate to Transform) என்ற கருப்பொருளின் கீழ் அக்டோபர் 8 முதல் 11 வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதி மோசடி தடுப்பு, குவாண்டம் தொடர்பு, 6G, ஆப்டிகல் தொடர்பு மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற துறைகளில் பல ஸ்டார்ட்அப்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்கின்றன என்றும் இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை நிரூபிக்கின்றன என்றும் கூறினார்.
தற்சார்பு இந்தியாவுக்கு வலிமை
இந்திய மொபைல் காங்கிரஸ் ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாக வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்கள்தான் காரணம் என்றார். ‘தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி நிதி’, 'டிஜிட்டல் தொலைத்தொடர்பு புத்தாக்கம்' போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்கள் 5G, 6G, ஆப்டிகல் கம்யூனிகேஷன் மற்றும் டெரா-ஹெர்ட்ஸ் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான நிதி மற்றும் சோதனை வசதிகளை வழங்குகின்றன.
இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடும் தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா பெற்றுள்ள வெற்றியும் தற்சார்பு இந்தியா என்ற பார்வையின் வலிமையை பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.
சவால்களை முறியடித்த ‘மேக் இன் இந்தியா’
'மேக் இன் இந்தியா' திட்டம் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “ஒரு காலத்தில் 2ஜி இணைப்பிற்காகப் போராடிய நாடு, இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5ஜி கவரேஜைக் கொண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது, மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கு வளர்ந்துள்ளது, மற்றும் ஏற்றுமதி 127 மடங்கு அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
"கடந்த பத்தாண்டுகளில், மொபைல் போன் துறை கோடிக்கணக்கான நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியில் உள்ள 45 இந்திய நிறுவனங்கள் சுமார் 3.5 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.