ஐபேக் அலுவலகத்தில் ED ரெய்டு.. திடீரென புகுந்த மம்தா.. ஆவணங்கள் மாயம்? பகீர் தகவல்!
நான் பாஜக கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினால் என்னவாகும்? ஒருபுறம், மேற்கு வங்கத்தில் SIR-ஐ மேற்கொண்டு அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் நீக்குகிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் 15 இடங்களில் சோதனைகளை நடத்தியது. அந்த வகையில் கொல்கத்தாவில் உள்ள அரசியல் ஆலோசக நிறுவனமான ஐபேக் அலுவலகங்களில், போலி அரசு வேலை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வேட்பாளர் பட்டியல்கள் உட்பட கட்சி தொடர்பான பொருட்களை ED பறிமுதல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
வேட்பாளர் பட்டியலை சேகரிப்பது ED, அமித் ஷாவின் வேலையா?
மேலும், மத்திய ஏஜென்சிகளை உள்துறை அமைச்சர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். "கட்சியின் ஹார்டு டிஸ்க், வேட்பாளர் பட்டியலை சேகரிப்பது ED, அமித் ஷாவின் வேலையா? நாட்டைக் பாதுகாக்க முடியாத மோசமான உள்துறை அமைச்சர், எனது கட்சியின் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்கிறார்" என்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
கட்சி குறித்த தகவல் சேகரிப்பு
பாஜகவுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் கடுமையான எதிர்வினைகள் ஏற்படும் என்று எச்சரித்த முதல்வர், வரவிருக்கும் மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியில் ஆளும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார். சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்முறையின் போது மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நான் சோதனை நடத்தினால் என்னவாகும்?
"நான் பாஜக கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினால் என்னவாகும்? ஒருபுறம், மேற்கு வங்கத்தில் SIR-ஐ மேற்கொண்டு அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் நீக்குகிறார்கள்... தேர்தலைக் காரணம் காட்டி, அவர்கள் என் கட்சி பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறார்கள்," என்று முதல்வர் மம்தா மேலும் கூறினார்.
மம்தா மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
அதேவேளையில் முறைப்படி சோதனை செய்தபோது மம்தா பானர்ஜி உள்ளே புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்து விட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

