அங்கன்வாடியில் பிரியாணி.! மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
அங்கன்வாடியில் பிரியாணி வேண்டும் எனக் கேட்ட சிறுவன் ஷன்குவின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு அங்கன்வாடி உணவுப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது. முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட சத்தான உணவுகள் இனி வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவுகளை அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் மாணவர்களுக்கு முட்டை, பயிறு உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேவிகுளங்கரை பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் த்ரிஜல் எஸ். சுந்தர் என்ற ஷன்கு 'அங்கன்வாடியில் பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும்' என சிறுவனின் வீடியோ வெளியாகி வைரலானது. இதனை பரிசீலிப்பதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கான காலை உணவு, மதிய உணவு, பொது உணவு போன்ற துணை ஊட்டச்சத்துக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து, ஊட்டச்சத்து தரநிலைகளின்படி வளர்ச்சிக்கு உதவும் ஆற்றல் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துகள் சேர்க்கப்பட்டு, சுவையான உணவாக உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவில் நடைபெற்ற அங்கன்வாடி விழாவின் அங்கன்வாடி குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட 'மாதிரி உணவுப் பட்டியலை' அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டார்.
மாணவன் ஷன்குவின் வீடியோவை கவனித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், உணவுப் பட்டியலைப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பல்வேறு மட்டங்களில் கூட்டங்களை நடத்தி, குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து உணவுப் பட்டியலைப் புதுப்பித்தது.
முட்டை பிரியாணி, புலாவ் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட பாலும் முட்டையும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும எனவும் அறிவிக்கப்படுள்ளது. . புதுப்பிக்கப்பட்ட உணவுப் பட்டியலின்படி, ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படும்.
திங்கட்கிழமை காலை உணவாக பால், கொழுக்கட்டை/இலையடை, மதிய உணவாக சோறு, சிறுபயறு கறி, இலைக்கறி, உப்பேரி/தோரன், பொது உணவாக தானியம், பருப்பு பாயாசம்.
செவ்வாய்க்கிழமை காலை உணவாக நியூட்ரி லட்டு, மதியம் முட்டை பிரியாணி/முட்டை புலாவ், பழங்கள், பொது உணவாக ராகி அடை.
புதன்கிழமை காலை உணவாக பால், கொழுக்கட்டை/இலையடை, கடலை மிட்டாய், மதியம் பயறு கஞ்சி, காய்கறி கிழங்கு கூட்டு கறி, சோயா டிரை ஃப்ரை, பொது உணவாக இட்லி, சாம்பார், புட்டு, பட்டாணி கறி.
வியாழக்கிழமை காலை ராகி, அரிசி அடை/இலையப்பம், மதியம் சோறு, முளைக்கட்டிய பயறு, கீரை தோரன், சாம்பார், முட்டை ஆம்லெட், பொது உணவாக அவல், வெல்லம், பழக்கலவை.
வெள்ளிக்கிழமை காலை உணவாக பால், கொழுக்கட்டை, மதிய உணவாக சோறு, சிறுபயறு கறி, அவியல், இலைக்கறி, தோரன், பொது உணவாக கோதுமை நொறுக்கு புலாவ்.
சனிக்கிழமை காலை நியூட்ரி லட்டு, மதியம் காய்கறி புலாவ், முட்டை, ராய்தா, பொது உணவாக தானிய பாயாசம். ஒவ்வொரு உணவையும் தயாரிப்பதற்கான பொருட்கள், அவற்றில் உள்ள ஆற்றல், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உட்பட அனைத்து விவரங்களும் உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.