மண்பானையை கேஸ் அடுப்பில் வைத்து சமைத்தால் விரிசல் வருகிறதா? தடுக்க டிப்ஸ்!!
கேஸ் அடுப்பில் மண்பானையை வைத்து சமைக்கும் போது விரிசல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த காலத்தில் இல்லத்தரசிகள் பெரும்பாலும் நான்-ஸ்டிக், பித்தளை, சில்வர், இரும்பு என பல வகையான பாத்திரங்களில் தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கு மண்பானைகளை தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் தற்போது ஒரு சில பெண்கள் மண்பானையில் சமைப்பதில் ஆர்வமாக இருப்பதால், அவ்வப்போது சமையலுக்கு மண்பானை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதல்முறையாக ஒரு மண்பானையை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அதற்கு முன் சில வழிமுறைகளை பின்பற்றுவது ரொம்பவே முக்கியம். அப்போதுதான், மண்பானையை கேஸ் அடுப்பில் வைத்து சமைக்கும் போது விரிசல் ஏற்படாது. அது என்னென்ன வழிமுறைகள் என்ன என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
மண்பானையில் விரிசல் வராமல் தடுப்பது எப்படி?
- நீங்கள் கடையிலிருந்து மண் பானையை வாங்கி வந்த உடனே தண்ணீரில் சுமார் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு நாள் முழுவதும் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
- அதன் பிறகு மண்பானையில் எண்ணெய் தடவ வேண்டும். இதற்கு நீங்கள் எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
- இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் அரிசி கழுவிய தண்ணீரில் ஊற்றி, அதிக தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மரக்கரண்டியால் சிறிது கிளறி விடுங்கள்.
- சட்டியில் இருந்து நீரை வடிகட்டி மென்மையான ஸ்க்ரப் வைத்து உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். இப்போது நீங்கள் மண்பானையை கேஸ் அடுப்பில் வைத்து பயன்படுத்தினால் கீறல் எதுவும் விழாது.