60 கடல் மைல் தூரத்தில் இந்தியா-பாகிஸ்தான் கடற்படைகள்... அரபிக்கடலில் என்ன நடக்குது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அரபிக்கடலில் தனித்தனியே கடற்பயிற்சியை மேற்கொள்ள உள்ளன. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளும் இவ்வளவு நெருக்கமாக பயிற்சி நடத்துவது இதுவே முதல் முறை.

அரபிக்கடலில் கடற்படை ஒத்திகை
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அரபிக்கடலில் தனித்தனியே கடற்பயிற்சியை மேற்கொள்ள உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான தூரம் வெறும் 60 கடல் மைல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்சார் பயிற்சி
பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்திய கடற்படை குஜராத்தின் போர்பந்தர் மற்றும் ஓகா கடற்கரைகளுக்கு அருகே தனது கடல்சார் பயிற்சிகளை ஆகஸ்ட் 11 முதல் 12 வரை நடத்தும். இரு நாடுகளும் தனித்தனியே துப்பாக்கிச் சூடு பயிற்சிகளையும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் வழக்கமானவை என்றாலும், கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் பலியான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகத் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இலங்கை-பாகிஸ்தான் பயிற்சி ரத்து
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கையின் திருகோணமலையில் பாகிஸ்தானுடன் இணைந்து கடற்படைப் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருகோணமலை கடற்பகுதியில் பயிற்சி நடத்துவது குறித்து இந்தியா தனது கவலையை இலங்கைக்கு தெரிவித்ததையடுத்து, அந்தப் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. திருகோணமலை, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியமான ஒரு இடமாகக் கருதப்படுகிறது.
மோடியின் கொழும்பு பயணம்
பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த கூட்டுப் பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைகள் வழக்கமாக துறைமுக விஜயங்களும், கூட்டுப் பயிற்சிகளும் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ரத்து குறித்து இலங்கை அல்லது பாகிஸ்தான் எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.