பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்ப்பட்டுள்ளார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Pakistan Cricketer Haider Ali Arrested: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது பாகிஸ்தான் A அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அணியில் இடம்பெற்றிருந்த ஹைதர் அலி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை இந்த புகாரை விசாரித்து, ஹைதர் அலியை கைது செய்தது. பின்னர், அவர் விசாரணைக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுடன், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம்

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சட்டப்பூர்வ விசாரணைகள் முடியும் வரை ஹைதர் அலியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து சட்ட நடைமுறைகளை மதிப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் PCB கூறியுள்ளது. மேலும், ஹைதர் அலிக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

2021ல் ஒரு சர்ச்சையில் சிக்கினார்

ஹைதர் அலி ஏற்கெனவே ஒரு சர்ச்சையில் சிக்கினார். 2021ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டியின் போது கொரோனாஅ பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருப்பதால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

யார் இந்த ஹைதர் அலி?

25 வயதான ஹைதர் அலி வலதுகை பேட்ஸ்மேன். பாகிஸ்தானின் அட்டாக் நகரில் பிறந்த இவர், தனது அதிரடி ஆட்டத்தால் விரைவாக கவனம் ஈர்த்தார். 2019-ல் தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமான இவர், 2020-ல் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கினார். தனது அறிமுக T20I போட்டியிலேயே அரைசதம் அடித்து, பாகிஸ்தானுக்காக அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளிலும், 35 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தொடர் சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. கடந்த 2010-ல் இங்கிலாந்தில் நடந்த ஸ்பாட்-பிக்ஸிங் வழக்கில், பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், மற்றும் முகமது ஆசிப் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனார். ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிதி இல்லாமல் தள்ளாடி வரும் நிலையில், வீரர்களின் செயல்பாடுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan Cricketer Haider Ali Arrested