- Home
- இந்தியா
- இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. விசாரணையில் இறங்கிய என்ஐஏ.. தீவிரவாத தாக்குதலா?
இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. விசாரணையில் இறங்கிய என்ஐஏ.. தீவிரவாத தாக்குதலா?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கார் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை வெடிவிபத்து
தேசிய தலைநகரான டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் 1ஆம் நுழைவாயில் அருகே இன்று மாலை நிகழ்ந்த கார் வெடிபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வெடிவிபத்தால் மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் திடீரென எழுந்த அதிர்ச்சியால் பீதியடைந்தனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இதுபற்றி கூறும்போது, “வெடிச்சத்தம் காதைக் கிழிக்கும் அளவிற்கு இருந்தது; ஜன்னல்கள் அதிர்ந்தன” என்று கூறினர். தீ வேகமாக பரவியதால், ஏழு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன என்றும் அங்கிருந்த மக்கள் கூறுகிறார்கள்.
செங்கோட்டை மெட்ரோ நிலையம்
டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழு சம்பவ இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை கிடைத்த தகவல்படி, 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர், ஒருவர் தற்போது நிலையாக உள்ளார் என லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல் நிலை விசாரணையில், இந்த வெடிப்பு ஈகோ வான் (Eco Van) ஒன்றில் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வெடிவிபத்தின் தாக்குதலின் அருகில் இருந்த ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ ரிக்ஷா தீப்பற்றி சிதறியுள்ளன. இந்த விபத்து குறித்து மேலும் சிலர் தெரிவித்ததாவது, “அந்த வெடிச்சத்தம் காதைக் கிழிக்கும் அளவுக்கு இருந்தது. அருகிலிருந்து கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன.சாலையில் இரத்தக் கரைகள் மற்றும் கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடந்தன” என்றனர்.
என்ஐஏ விசாரணை தொடக்கம்
வெடிவிபத்துக்குப் பின் கார் முழுவதும் தீப்பற்றி, கருமை புகை வானில் எழுந்தது. தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தேசிய விசாரணை முகமையான என்ஐஏ (NIA) வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு தீவிரவாத சதி உள்ளதா என்றும் NIA ஆராய்கிறது.
இந்த வெடிவிபத்துக்குப் பின் மும்பை மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லக்னோவில் இருந்து உத்தரபிரதேசம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.