டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.
இன்று (திங்கள்கிழமை) மாலை செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் 1 ஆம் எண் நுழைவாயில் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியதால், அப்பகுதி மக்களும் பயணிகளும் பீதியடைந்தனர்.
செங்கோட்டை அருகே விபத்து
டெல்லி தீயணைப்புத் துறையின்படி, இந்த வெடிவிபத்தால் அருகில் இருந்த மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்
டெல்லி தீயணைப்புத் துறையின்படி, மாலை 6:55 மணியளவில் வெடிவிபத்து குறித்து அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 CAT ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மெட்ரோ நுழைவாயில் வெடிப்பு
உடனடி நடவடிக்கையாக தீ மேலும் பரவாமல் தடுக்க உதவியதாகவும், பொதும மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரக்கால குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
