- Home
- இந்தியா
- மண்டை ஓடு மட்டும் எங்க போச்சு! தர்மஸ்தலாவில் வழக்கில் தோண்டி எடுத்த எலும்புக்கூடுகளின் மர்மம்!
மண்டை ஓடு மட்டும் எங்க போச்சு! தர்மஸ்தலாவில் வழக்கில் தோண்டி எடுத்த எலும்புக்கூடுகளின் மர்மம்!
தர்மஸ்தலா கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய தோண்டலில் இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தர்மஸ்தலா கோவில் வழக்கு
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஒரு முக்கிய திருப்பமாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் துப்புரவுப் பணியாளர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கடந்த ஜூலை 29 முதல் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த விசாரணையின் ஆறாவதாகத் தோண்டிய இடத்தில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேத்ராவதி ஆற்றின் கரைக்கு அருகே, சுமார் 2 முதல் 3 அடி ஆழத்தில் இந்த எலும்புக்கூடு எச்சங்கள் கிடைத்துள்ளன. இது இந்த விசாரணையில் முதல் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு
இந்த விவகாரத்தைக் கிளப்பிய முன்னாள் துப்புரவுப் பணியாளர், 1995 முதல் 2014 வரை தாம் பல உடல்களை புதைத்ததாகக் கூறி, 15 இடங்களை அடையாளம் காட்டினார். இதில் முதல் 8 இடங்கள் நேத்ராவதி ஆற்றின் கரையிலும், 9 முதல் 12 இடங்கள் நெடுஞ்சாலைக்கு அருகிலும், 13வது இடம் நேத்ராவதி-அஜுகுரி சாலையிலும், கடைசி இரண்டு இடங்கள் கன்யாடி பகுதியிலும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்களில் ஒன்று ஆணுடையது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த தடயவியல் பரிசோதனை தேவைப்படும். மொத்தமாக 15 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் சில உடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மண்டை ஓடு கண்டெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக தோண்டப்பட்ட முதல் ஐந்து இடங்களில் எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதைக்கப்பட்ட பெண்கள்
தர்மஸ்தலா கோவிலின் முன்னாள் துப்புரவுப் பணியாளர் ஒருவர், சுமார் 20 ஆண்டுகளாக தனது மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் பல உடல்களைப் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். புதைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் மற்றும் சிறுமிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம், இந்தத் துப்புரவுப் பணியாளரின் வழக்கறிஞர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஏழாவது இடத்தில் தோண்டும் பணியைத் தொடங்குவது குறித்து எஸ்.ஐ.டி விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.