தர்மஸ்தலா கோயில் வழக்கு: ஊடகத் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி
தர்மஸ்தலா கோயில் விவகாரத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரர் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தர்மஸ்தலா வழக்கு
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோயில் விவகாரத்தில், ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தர்மஸ்தலா கோயிலின் தர்மகர்த்தா டி. வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் அடிப்படையில், ஊடகங்கள் எந்தவொரு அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என பெங்களூரு சிவில் நீதிமன்றம் கடந்த ஜூலை 18ஆம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவிட்டது.
யூடியூப் சேனல் சார்பில் மனு
இந்த உத்தரவை எதிர்த்து, 'தேர்ட் ஐ' (Third Day) என்ற யூடியூப் சேனல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(a)) பறிக்கும் வகையில் உள்ளது என மனுவில் வாதிடப்பட்டது. மேலும், தர்மஸ்தலா கோயில் வழக்கில் மாநில அரசின் உயர் மட்ட விசாரணையை இந்த உத்தரவு தடுப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஏற்கனவே, கர்நாடக அரசு தர்மஸ்தலா கோயில் வழக்கில் வழக்கின் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மஸ்தலா கோயில் வழக்கு
கர்நாடகாவின் பிரபல தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் துப்புரவு பணியாளர் ஒருவர், கோயில் வளாகத்தில் 1995 முதல் 2014 வரை பல பெண்களின் உடல்களை புதைக்க வற்புறுத்தப்பட்டதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த உடல்களில் பல பாலியல் வன்கொடுமையின் அறிகுறிகளுடன் இருந்ததாகவும், சில உடல்கள் பள்ளி சீருடையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனை அடுத்து, இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் துப்புரவுப் பணியாளர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் ஊடகங்களில் கசிந்தது.