கர்னூல் பேருந்து விபத்து எப்படி நடந்தது? அந்த ஒரு பைக் தான் இவ்வளவு உயிர்களைப் பறித்ததா?
luxury bus fire accident India : ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில், உறங்கிக்கொண்டிருந்த பல பயணிகள் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயங்களுடன் தப்பினர்.

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலர் உயிருடன் எரிந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்களுக்கு இணையாக சொகுசு பேருந்துகளில் அதிகளவு மக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியில் இருந்து காவேரி டிராவல்ஸ் என்ற சொகுசு பேருந்து பெங்களூருக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 43 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து ஹைதராபாத்தை விட்டு புறப்பட்ட சில மணி நேரங்களில் பயணிகள் தூங்கிவிட்டனர். அப்போது ஏற்பட்ட சிறிய விபத்து தான் மிகப்பெரிய அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக டிஐஜி பிரவீன் குமார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கர்னூல் மாவட்டம் கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னடேகூர் அருகே ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அப்போது ஒரு பைக் பேருந்தின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது பேருந்து மோதியதில் பைக் ஓட்டுநர் சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த பைக் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதனால் கடுமையான உராய்வு, தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விபத்து நடந்த உடனேயே ஏற்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் பிற ஊழியர்கள் பயந்து கீழே இறங்கியுள்ளனர்.
முதற்கட்ட காவல்துறை விசாரணையில் விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து ஓட்டுநர் பயணிகளை எச்சரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. பேருந்து ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற போதிலும், பலத்த காற்று காரணமாக சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாகவே உயிர் இழப்பு அதிகமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். தீ விபத்துக்குள்ளானதால், பலர் விழித்தெழுந்து தப்பிக்க முயற்சிக்கும் முன்பே பேருந்து முழுவதும் தீ பரவியதால் செல்லும் வழியும் குறுகியதாக இருந்ததால உயிருடன் எரிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. .
சில பயணிகள் அவசரகால கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து தப்பினர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர். விபத்திற்கு காரணமான பைக்கில் சென்ற ஒருவரும் பேருந்து மோதி இறந்தார். பேருந்து விபத்துக்குள்ளான பகுதியில் சாலையோரத்தில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக டிஐஜி பிரவீன் குமார் தெரிவித்தார்.
விபத்து நடந்தபோது பேருந்தில் 43 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதுவரை 11 பேர் இறந்துவிட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.. மேலும் சிலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவர்கள் பற்றிய எந்த தடயமும் இல்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. 23 பயணிகள் பாதுகாப்பாக தப்பித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கர்னூல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஏ. சிறி கூறுகையில், “அதிகாலை 3 மணி முதல் 3:10 மணி அளவில் தனியார் பேருந்து மீது ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதில் பயணம் செய்த 41 பயணிகளில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுவரை, இறந்தவர்களில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மற்றவர்களின் அடையாளங்களை காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.