- Home
- இந்தியா
- தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி! நாய்களுக்கு சப்போர்ட் செய்தவர்களை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி! நாய்களுக்கு சப்போர்ட் செய்தவர்களை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
பெங்களூருவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் தெரு நாய்களுக்கு சப்போர்ட் செய்யும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன

Girl Dies After Bitten By Stray Dogs In Bengaluru
இந்தியா முழுவதும் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் தெரு நாய்கள் குழந்தைகள், பெண்களை விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. மேலும் பொதுமக்களை கடித்துக் குதறும் தெரு நாய்களால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. நாய்களின் அட்டூழியம் தாங்க முடியாததால் இரவு நேரத்தில் மக்கள் நிம்மதியாக சாலையில் நடமாட முடியவில்லை.
இந்தியாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
தலைநகர் டெல்லியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ஒரு குழந்தையை தெரு நாய்கள் கடித்த வீடியோ வைரலானது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டெல்லி-NCR பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, அவற்றைச் சிறப்பு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பொங்கிய விலங்குகள் நல ஆர்வலர்கள், தெரு நாய்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
பெங்களூருவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி
இந்நிலையில், இந்தியாவின் ஹைடெக் நகரமான பெங்களூருவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவின் தாவணகெரே நகரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி கதிரா பானு, கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு தெரு நாய்கள் கொடூரமாக கடித்துக் குதறின. இதனால் படுகாயத்துடன் அலறித் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பு
பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பல மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமி பெற்றோர் அவளை முதலில் சேர்த்த மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு எதிராகக் கொடுக்கப்படும் தடுப்பூசிகளை முறையாக போடாமல் விட்டதால் ரேபிஸ் நோய் தாக்கியது தெரியவந்தது.
விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பாய்ந்த நெட்டிசன்கள்
தெரு நாய்கள் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என போராடிய விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது நெட்டிசன்கள் பாயத் தொடங்கியுள்ளனர். ''தெரு நாய்களை காப்பாற்ற வேண்டும் என குரல் கொடுக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள், இப்போது நாய்களால் சிறுமி இறந்ததற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மனிதர்களின் உயிரை விட தெரு நாய்கள் பெரிதா?'' என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
காரில் செல்பவர்களை நாய்கள் கடிக்காது
''தெரு நாய்களுக்கு கரிசனம் காட்டும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரும் வசதியாக கார்களில் செல்வார்கள். அவர்களுக்கு தெரு நாய்களால் பிரச்சனை இல்லை. ஆனால் பைக்கிலும், நடந்தும் செல்லும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தான் தெரு நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்'' என்று நெட்டிசன்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.