பார்வை இழந்து தவிக்கும் காட்டு யானை! வனத்துறை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
பாலக்காடு டஸ்கர்-5 யானைக்கு கண் பார்வைக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு. நெற்றி, கால்களில் காயங்களுடன் சுவரில் மோதி நடப்பதில் சிரமப்படும் யானைக்கு சிறப்புக்குழு சிகிச்சை அளிக்க உள்ளது.

பாலக்காடு டஸ்கர்-5 யானை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் காஞ்சிக்கோடு வலியேறி பகுதியில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்துவந்த, 'பாலக்காடு டஸ்கர்-5' என்ற காட்டு யானைக்கு, கண் பார்வைக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
யானைக்கு பார்வை குறைபாடு
இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்த வனத்துறை அதிகாரிகள், அதன் நெற்றியிலும் கால்களிலும் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். யானைக்கு பார்வை குறைபாடு இருப்பதால், அது பல இடங்களில் சுவரில் மோதி இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக, யானையின் கண்களில் இருந்து நீர் வடிவதுடன், நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான வலியால் அவதி
தற்போது கோங்காட்டுப்பாடு வனப்பகுதியில் உள்ள அந்த யானை, கடுமையான வலியால் அவதிப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இந்த பணியை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்புக்குழு இன்று பாலக்காடு வந்தடைந்தது.
இரு கண்களிலும் பார்வை இழப்பு
ஏற்கனவே ஒரு கண்ணில் பார்வையிழந்து இருந்த இந்த யானைக்கு, தற்போது மற்றொரு கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதால், அதன் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்புக்குழுவின் ஆய்வுக்குப் பிறகு, சிகிச்சைக்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.