- Home
- இந்தியா
- 80 பேரை காலி செய்த ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’... ஓய்வுக்கு முன் தரமான சம்பவம்! யார் இந்த தயா நாயக்?
80 பேரை காலி செய்த ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’... ஓய்வுக்கு முன் தரமான சம்பவம்! யார் இந்த தயா நாயக்?
மும்பையின் 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக், ஓய்வுக்கு ஒரு நாள் முன்பு ஏசிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்த அவர், 80க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்களில் தொடர்புடையவர்.

'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக்
மும்பையின் பிரபல 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக், பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, உதவி ஆணையர் (ஏசிபி) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அவருடன் மேலும் மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உடுப்பியைச் சேர்ந்த தயா நாயக், சிறுவயதில் ஒரு தேநீர்க் கடையில் பணிபுரிந்து வந்தார். பின்னர், 1996ஆம் ஆண்டு காவல்துறையில் இணைந்தார். அவரது தாயாரின் பெயரில் கர்நாடகாவில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஊழல் தடுப்புப் பிரிவினர் (ACB) அவருக்கு எதிராக விசாரணை நடத்தியதால், அவரது பணி வாழ்க்கையில் சில சலசலப்புகள் ஏற்பட்டன.
சொத்துக் குவிப்பு, 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்
பின்னர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தயா நாயக், கடந்த ஆண்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
தயா நாயக் 80 க்கும் மேற்பட்ட நிழல் உலக தாதாக்களை என்கவுன்ட்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. வினோத் மட்கர், ரஃபிக் தப்பா, சாதிக் காலியா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூன்று பயங்கரவாதிகள் உள்பட பலர் இவரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.
அம்பானி வழக்கில் முக்கியப் பங்கு
தற்போது பயங்கரவாத தடுப்புப் படையில் (ATS) உள்ள தயா நாயக், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெளியே ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தது தொடர்பான வழக்கை விசாரிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
தயா நாயக்குடன், ஜல்கானைச் சேர்ந்த மேலும் மூன்று காவல்துறை ஆய்வாளர்களான ஜீவன் காரத், தீபக் தால்வி மற்றும் பாண்டுரங் பவார் ஆகியோருக்கும் உதவி ஆணையராக (ஏசிபி) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.