எரிந்த பணத்தின் மர்மம்... மூவர் குழுவுக்கு மாறும் யஷ்வந்த் வர்மா வழக்கு!
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதால், பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதவி நீக்க விசாரணை நடத்த, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு என்ன?
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கடந்த மார்ச் 14 அன்று, யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள், வீட்டின் ஒரு அறையில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டனர். இது கணக்கில் காட்டப்படாத பணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உள் விசாரணைக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒரு உள் விசாரணைக் குழுவை அமைத்தார். இந்தக் குழுவின் அறிக்கையை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஆகஸ்ட் 7 அன்று, நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு, உள் விசாரணைக் குழுவின் அறிக்கை சட்டப்பூர்வமானது எனக் கூறி, நீதிபதி வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
மக்களவையில் தீர்மானம்
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு உறுப்பினர்கள்
நீதிபதி அமித் குமார், நீதிபதி மனிந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா, மூத்த வழக்கறிஞர் பி.பி. ஆச்சார்யா ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, தனது அறிக்கையை அளிக்கும். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விசாரணை, நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.