- Home
- இந்தியா
- அடேங்கப்பா! ரூ.400 கோடியா? மங்காத்தா பட பாணியில் சம்பவம்.. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை இதுதான்
அடேங்கப்பா! ரூ.400 கோடியா? மங்காத்தா பட பாணியில் சம்பவம்.. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை இதுதான்
நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா பட பாணியில் ரூ.400 கோடி பணம் நிரப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்கள் திடீரென மாயமான சம்பவம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மங்காத்தா கொள்ளை
ரூ.400 கோடி கன்டெய்னர் கடத்தல் சம்பவம் தற்போது இந்திய குற்றவியல் வரலாற்றில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியது என்றே கூறலாம். கோவாவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு செல்லும் வழியில் இரண்டு கன்டெய்னர்கள் திடீரென மாயமானது. பல மாதங்கள் கழித்து தான் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாமதமாக வெளியான இந்தத் தகவல், மூன்று மாநில காவல்துறையினரையும் உஷாராக்கியுள்ளது. இந்த சம்பவம் 2025 அக்டோபர் 16 அன்று நடந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்டெய்னர் கடத்தல்
கோவாவிலிருந்து மகாராஷ்டிராவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர்கள், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் கானாபூர் தாலுகாவில் உள்ள சோர்லா காட் பகுதியில், ஆபத்தான வனப்பாதையில் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அந்த கன்டெய்னர்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமான பணம் இருந்ததாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.400 கோடி கொள்ளை வழக்கு
மகாராஷ்டிர போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், இந்த பணம் மகாராஷ்டிராவின் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிஷோர் ஷேட்டுக்கு சொந்தமானதாக தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகை பணம் கன்டெய்னர்களிடம் கொண்டு செல்லப்பட்ட காரணம் என்ன, அது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இந்த வழக்கு நீண்ட நாட்களாக ரகசியமாக இருந்தது சந்தேகங்கள் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை
இந்த கொள்ளை எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்றால், சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு நாசிக்கைச் சேர்ந்த சந்தீப் பாட்டீல் என்பவரை சிலர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரை சுமார் ஒன்றரை மாதங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, “கன்டெய்னர் கடத்தலுக்கு நீ தான் காரணம்” என குற்றம் சாட்டி, ரூ.400 கோடி பணத்தை ஒப்படைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என மிரட்டியுள்ளனர். பின்னர் தப்பித்த சந்தீப் பாட்டீல், 2026 ஜனவரி 1 அன்று நாசிக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எஸ்ஐடி விசாரணை
வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விசாரணையை எஸ்ஐடி (எஸ்ஐடி) குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா போலீசார் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பெலகாவி எஸ்பி கே. ராமராஜன், மகாராஷ்டிர அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வந்ததை உறுதிப்படுத்தி, எஸ்ஐடி குழுவுக்குத் தேவையான தகவல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்து தற்போது ரீ- ரிலீஸ் ஆகியுள்ள மங்காத்தா படத்திலும் இதேபோல கன்டெய்னர் கடத்தல் சம்பவம் தான் படத்தின் முக்கிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

