- Home
- உடல்நலம்
- Bariatric Surgery : எடையை குறைக்க அறுவை சிகிச்சை? நல்லதா? கெட்டதா? விளக்கும் மருத்துவர்கள்
Bariatric Surgery : எடையை குறைக்க அறுவை சிகிச்சை? நல்லதா? கெட்டதா? விளக்கும் மருத்துவர்கள்
எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை என்பது உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ தீர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Is Bariatric Surgery Safe?
உடல் பருமன் என்பது உலகளாவிய பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் பருமன் காரணமாக நீரிழிவு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைக்க முடியாதவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில அரிதான சமயங்களில் இந்த அறுவை சிகிச்சையால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் ஒரு வகையான ‘மினி கேஸ்டிரிக் பைபாஸ்’ அறுவை சிகிச்சை பற்றியும், அதன் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
BMI அளவு 35-க்கும் மேல் இருந்தால் மட்டுமே சிகிச்சை
எடை குறைப்பு அறுவை சிகிச்சை பற்றி குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியதாவது, எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் பைபாஸ் அறுவை சிகிச்சை, வயிற்று பட்டை அறுவை சிகிச்சை, ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி என்று பக வகைகள் உள்ளது. அதில் ஒரு வகை தான் ‘மினி கேஸ்டிரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை’. எந்த வகையன எடை குறைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் முதலில் BMI அளவிடப்பட வேண்டும். இதை பொறுத்தே எந்த வகையான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். BMI அளவீடு 35 மற்றும் அதற்கு மேல் இருந்து சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளிட்டவை இருந்தால் முதலில் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படும். அதிலும் மாற்றம் இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பர்.
மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை
மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோடிக் சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும் முறையாகும். இதில் இரண்டு முறை உள்ளது. ஒன்று சாப்பிடும் சாப்பாட்டின் அளவை குறைக்க இரைப்பையை சுருக்குவது. மற்றொன்று இரைப்பையில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் அளவை குறைப்பது. சாதாரணமாக மனித இரைப்பை இரண்டு லிட்டர் அளவிலான உணவுப் பொருட்களை தக்க வைத்துக் கொள்ளும். அறுவை சிகிச்சையின் போது ஸ்டாப்ளர் தொழில்நுட்ப மூலம் இதன் அளவு குறைக்கப்படும். இதனால் இரைப்பையில் குறைந்த அளவே உணவு தங்கும். இதன் காரணமாக அதிக உணவு உட்கொள்ள முடியாமல் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.
இரு முறைகளில் நடத்தப்படும் மினி கேஸ்ட்ரிக் பைபாஸ்
உடலுக்கு செல்லும் கலோரிகளின் அளவு குறைக்கப்படுவதால் உடல் எடை கணிசமாக குறைந்துவிடும். இது சாப்பிடும் அளவை குறைக்கும் முறை. மற்றொரு முறை உடலில் அதிக அளவு ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் முறை. சிறுகுடலின் அளவு பொதுவாக ஏழு முதல் எட்டு அடி வரை இருக்கும். இதை நான்கு அடிவரை குறைக்கப்பட்டு இரைப்பையுடன் பைபாஸ் செய்யப்படும். இதனால் இரைப்பையில் இருந்து வெளியேறும் ஊட்டச்சத்து நேராக சிறுகுடலில் பின்பகுதியை சென்று அடையும். அங்கு குறைந்த அளவிலான ஊட்டச்சத்து உறிஞ்சப்படும். தேவையான அளவை தவிர்த்து அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாது. இதன் காரணமாகவும் உடல் எடை வெகுவாக குறைந்துவிடும்.
ஸ்டேபிளர் முறை
இந்த மினி கேஸ்ட்ரிக் பைபாஸ் முறையானது நாம் பேப்பர்களுக்கு ஸ்டேபிளர் அடிப்பது போன்ற முறை என்பதால் இது ஒரு மீள் அமைக்கக்கூடிய சிகிச்சை முறை. மீண்டும் பழைய உடலமைப்பு தேவைப்படுபவர்கள் ஸ்டேபிளரை நீக்கி விட்டால் மீண்டும் அவர்கள் உணவு முறை பழைய நிலைக்கு வந்துவிடும். இந்த அறுவை சிகிச்சையில் எந்த பகுதியும் வெட்டி நீக்கப்படுவதில்லை. இந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் குணப்படுத்த முடியாத சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை கூட குணமாகி உள்ளது. எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இது ஒரு அறுவை சிகிச்சை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆபரேஷனுக்கு பின்னர் இதனால் பல சிக்கல்கள் ஏற்படலாம்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பின்விளைவுகள் ஏற்படலாம்
மயக்க மருந்து கொடுப்பதில் தொடங்கி இரத்தம் உறையாமல் இருத்தல், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இரைப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளில் கசிவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உறிஞ்சப்படாததால் அதிகமான கழிவு வெளியேறுதல், அதிக எடையிழப்பு, வாய்வு பிரச்சனை போன்றவை ஏற்படலாம். உடல் எடையை குறைக்க இது எளிமையான வழியாக இருப்பதால் இந்த சிகிச்சை மேற்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதிக உடல் பருமன் (BMI 35 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்) உடல் பருமனால் ஏற்பட்ட பிற நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சரியான மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடை குறைப்பு சிகிச்சை எடுத்தால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.
சரியான மருத்துவ ஆலோசனை தேவை
மினி பேரியாட்ரிக் பைபாஸ் சர்ஜரி நன்மைகளை வழங்கினாலும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த புரிதல் அவசியம். சிகிச்சைக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், உளவியல் நிபுணர், மயக்க மருந்தாளர் ஆகியோர் விரிவாக கலந்துரையாடி உங்கள் உடலுக்கு ஏற்ற சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு திட்டத்தை முழுமையாக புரிந்து கொள்வது அவசியம். சுய மருத்துவம் அல்லது சுயமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது பாதுகாப்பானது. உணவுமுறை மாற்றம், டயட், உடற்பயிற்சி ஆகியவை உடல் எடையை குறைப்பதற்கான பாதுகாப்பான வழிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.