தினமும் '5' நிமிடங்கள்.. தொப்பை குறைய எத்தனை ஸ்கிப்பிங் செய்யனும் தெரியுமா?
Reduce Belly Fat While Skipping Rope : ஸ்கிப்பிங் செய்வதால் தொப்பையை குறைக்கலாம். அது மட்டுமின்றி அதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.

தினமும் '5' நிமிடங்கள்.. தொப்பை குறைய எத்தனை ஸ்கிப்பிங் செய்யனும் தெரியுமா?
ஸ்கிப்பிங் செய்வது ஒரு விளையாட்டு மாதிரி தான். ஆனால், அது விளையாட்டு என்பதைத் தாண்டி பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. நம்முடைய உடலை பராமரிக்க உதவுவதோடு, எடையை குறைக்கவும் நல்ல பயிற்சி. ஒருவர் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அவருடைய நிணநீர் மண்டலம் நன்கு செயல்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயிற்சி ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றால் மிகையாகா! தசைகளை வலுவாக்குவதோடு பல்வேறு நன்மைகளையும் தரும் ஸ்கிப்பிங் பயிற்சி பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இதய ஆரோக்கியம்
அண்மையில் செய்த ஆய்வில் ஸ்கிப்பிங் செய்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்பவர்கள் இதயம் நன்றாக இருப்பது போலவே ஸ்கிப்பிங் செய்தால் இதயமும் நன்றாக இருக்கும். ஒரு நாளில் இதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கி இதற்காக பயிற்சி செய்தால் கூட 100க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்துவிடலாம். வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால் 300 கலோரிகள் வரை உடலில் இருந்து ஆற்றல் வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி நல்ல பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டே ஸ்கிப்பிங் செய்தால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்து மனநிலை சீராக இருக்கும். மனச்சோர்வு நீங்கும்.
மூளை செயல்திறன் கூடும்!
ஸ்கிப்பிங் செய்வதால் உங்களுடைய மூளை நன்றாக செயல்படுகிறது. ஏனென்றால் கவனததை குவித்து பயிற்சி செய்வதால் மூளையின் கூர்மை அதிகரிக்கிறது. ஸ்கிப்பிங் கயிறு சுழற்றப்படும்போது சரியாக குதித்து கயிற்றுக்குள் சிக்காமல் லாவகமாக பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு கவனச்சிதறல் இருக்கக் கூடாது. இந்தப் பயிற்சியை நீங்கள் சரியாக செய்யும்போது மூளை நன்றாக செயல்படும்.
கால் தசை இயக்கம்:
ஸ்கிப்பிங் செய்வதால் கால் தசைகள் வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் மாறும். உங்களுடைய தொடை, கால்களின் பின்புறம் என ஒட்டுமொத்தமாக கீழ் உடலின் வலிமைக்கும் ஸ்கிப்பிங் உதவியாக இருக்கும்.
எலும்புகள் வலுப்பெறும்!
எலும்புகள் வலிமையாக ஸ்கிப்பிங் சிறந்த பயிற்சி எனலாம். தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் வருகிற வாய்ப்பு குறைவு. கடந்த 2017இல் நடந்த்திய ஓர் ஆய்வில், வாரந்தோறும் ஸ்கிப்பிங் செய்தவர்களுக்கு எலும்பின் அடர்த்தி அதிகமாக இருந்துள்ளது. அதாவது ஸ்கிப்பிங் செய்த 11 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகள், ஸ்கிப்பிங் செய்யாத நபர்களைக் காட்டிலும் அதிக எலும்பு அடர்த்தியைக் கொண்டிருந்தார்களாம்.
இதையும் படிங்க: வெறும் 20 நிமிடம் போதுமே.. உடல் எடை குறைப்பது முதல் உயரம் அதிகரிப்பது வரை.. பல நன்மைகள் இருக்கு!
தொப்பை குறையும்!
ஸ்கிப்பிங் தொப்பையைக் குறைக்க உதவும் அற்புதமான பயிற்சி. இது உடலின் தசைகளை வலுவாக்கி, இறுகச் செய்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவியாக உள்ளது. நீங்கள் தினமும் ஸ்கிப்பிங் செய்யலாம். தினமும் செய்யமுடியாவிட்டால் குறைந்தபட்சம் வாரத்தில் 5 நாட்கள் செய்துவிட்டு உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது வயிற்று தசைகள் இறுகி தேவையில்லாத கொழுப்பு குறையும். இதனால் டயர் போல தொங்கும் தொப்பை குறையும். ஸ்கிப்பிங் பயிற்சியில் குதிக்கும்போது உடல் நன்கு வேலை செய்கிறது. அதனால் உடலில் அதிகமான கலோரிகள் இழப்பு ஏற்பட்டு எடை குறைகிறது.
இதையும் படிங்க: டயட் இருக்காமலே தொப்பை குறையும்... தினமும் ஸ்கிப்பிங் மட்டும் பண்ணா போதும்..
எத்தனை ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்?
ஒரே நாளில் இமயமலையை தொட முடியாது. அதைப் போல தான் தொடர்ச்சியான பயிற்சிதான் உடலை வலுபடுத்தும். இன்று நீங்கள் ஸ்கிப்பிங் செய்ய தொடங்கினால் முதல் 10 ஸ்கிப்பிங் 3 செட் செய்யுங்கள். உடல் பயிற்சிக்கு பழக பழக அந்த எண்ணிக்கையை கூட்டுங்கள். ஏற்கனவே ஸ்கிப்பிங் செய்து பழக்கப்பட்டிருந்தால் அதற்கேற்றபடி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஒரு நாளுக்கு 10 என தொடங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையை கூட்டுங்கள். உடல் பருமனைக் குறைக்க வெறும் ஸ்கிப்பிங் செய்யாமல் உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க நினைத்தால் நீங்கள் சாப்பிடும் போது கலோரிகளை குறைக்க வேண்டும். ஒருநாளுக்கு 2000 கலோரிகள் உங்களுக்கு தேவை எனில் அதிலிருந்து 500 கலோரிகள் குறைவாக நீங்கள் சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலில் உள்ள கொழுப்பு பயன்படுத்தப்பட்டு உடல் எடை குறையும். அதைவிட்டு நீங்கள் 3000 கலோரிகள் சாப்பிட்டுவிட்டு 1000 ஸ்கிப்பிங் செய்தாலும் உடல் எடை அதிகரிகாமல் இருக்குமே தவிர குறையாது. அதனால் ஆரோக்கியமான உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை;
சமதளமான தரை, மண், புல்வெளி போன்ற இடங்களில் பயிற்சி மேற்கொள்ளலாம். ஸ்கிப்பிங் செய்யும்போது மூச்சுக் கட்டுப்பாடு கடினமாக இருக்கலாம். அதனால் தினமும் பிராணயாமா உள்ளிட்ட சுவாசப் பயிற்சிகளை செய்யுங்கள். அதிக உயரமாக குதித்து மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. கணுக்கால் மூட்டுகளில் உள்ள அழுத்தத்தை சரி செய்ய ஐஸ் வாட்டரில் வைக்கலாம். மூட்டு வலி இருப்பவர்கள், கர்ப்பிணிகள், முழங்காலில் ஸ்டீல் வைத்திருப்பவர்கள் ஸ்கிப்பிங் செய்யக் கூடாது. வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்துவிட்டு பயிற்சி செய்யுங்கள்.