- Home
- உடல்நலம்
- Healthy Aging Tips : பெண்களே 40 வயது நெருங்குதா? உணவுப் பழக்கத்தில் இதை மாத்துங்க! முதுமை ஆரோக்கியமா மாறும்
Healthy Aging Tips : பெண்களே 40 வயது நெருங்குதா? உணவுப் பழக்கத்தில் இதை மாத்துங்க! முதுமை ஆரோக்கியமா மாறும்
40 வயதுக்குட்பட்ட பெண்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் விதம், வயதாகும் நிகழ்வை எப்படி ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது என ஹார்வர்ட் தலைமையிலான ஆய்வு வெளிப்படுத்துகிறது.

ஆரோக்கியமான முதுமை என்றால் நீண்ட ஆயுள் அல்ல; வயதாகும்போது வாழ்க்கைத் தரமும் நன்றாக இருப்பது. நடுத்தர வயது பெண்கள் அன்றாட வாழ்வில் சரியான முறையில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமான முதுமைக்கு காரணமாகும். 40 வயதிற்குள் சாதுர்யமாக கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்வு செய்வது பெண்களின் நீண்டகால சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும் என 30 ஆண்டுகால ஹார்வர்ட் ஆய்வு சொல்கிறது.
ஹார்வர்ட் தலைமையில் நடந்த ஆய்வில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய வாழ்க்கை முறை ஆராயப்பட்டது. இதில் உணவுமுறை வயதாகும் நிகழ்வுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆரோக்கியமான முதுமை என்பது நாள்பட்ட நோய்களிலிருந்து தற்காத்தல், மேம்பட்ட மன ஆரோக்கியம், ஞாபக மறதியின்மை போன்றவை கவனிக்கப்பட்டன.
உணவாக உயர்தர கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட்ட பெண்கள், குறைந்த தரம் வாய்ந்த கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட்ட பெண்களை விடவும் "ஆரோக்கியமான முதுமையை" அடைந்திருந்தார்கள். அதாவது மைதா, அரிசி, சர்க்கரை சிற்றுண்டிகள், கூல்ட்ரிங்ஸ், உருளைக்கிழங்கு, சோளம் ஆகியவை குறைந்த தரமான கார்போஹைட்ரேட்டுகளாகும். இதை உண்ணும் பெண்களின் முதுமைகாலம் ஆரோக்கியமற்றதாக இருந்துள்ளது.
எல்லா கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்றில்லை. சில கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்டவை. இது விரைவாக ஜீரணிக்கும். இதைத்தான் குறைந்த தரமான கார்போஹைட்ரேட் என்கிறோம். இந்த கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கின்றன.
உயர்தர கார்போஹைட்ரேட் அல்லது ஸ்மார்ட் கார்போஹைட்ரேட் இதற்கு நேர்மாறானவை. ஓட்ஸ், குயினோவா, முழு தானியங்கள், பெர்ரி, கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை உயர்தர கார்போஹைட்ரேட்டுகளாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் காணப்படும் உயர்தர கார்போஹைட்ரேட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கின்றன. நினைவாற்றல் மேம்படும். நாள்பட்ட நோய் அபாயம் குறையும்.
ஸ்மார்ட் கார்ப்ஸ் என்பவை நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவை கொண்டிருப்பதால் நாள்பட்ட வீக்கம், வயது தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எதை சாப்பிடலாம்?
வெள்ளை அரிசி, மைதா உணவுக்கு பதிலாக பழுப்பு அரிசி, குயினோவா, முழுதானியங்கள், கோதுமை உணவுகளை எடுக்கலாம். தினமும் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பீன்ஸ், பருப்பு, பட்டாணி அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 40 வயதை நெருங்கிய பெண்கள் உயர்தர கார்போஹைட்ரேட்டுகளை அன்றாட வாழ்வில் சேர்ப்பது நீண்ட ஆயுளுக்கு உதவும்.