Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
டீயுடன் எதையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

What Not To Eat With Tea
பலர் தங்கள் நாளை டீ அல்லது காபியுடன் தொடங்குகிறார்கள். சிலருக்கு இது பழக்கம், சிலருக்கு ஆற்றல். ஆனால் டீ-காபியுடன் சேர்த்து உண்ணும் சில உணவுகள் மெதுவாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த தவறான கலவைகள் வாயு, அமிலத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
டீயுடன் சமோசா, பிரட் பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை பலரும் விரும்புவர். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டீயில் உள்ள டானின், எண்ணெயுடன் சேரும்போது வாயு, வயிறு உப்புசம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதும் குறையும்.
இரும்புச்சத்து உணவுகள்
டீ அல்லது காபியுடன் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட், இரும்புச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கிறது. இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கீரைகள், விதைகள் போன்ற இரும்புச்சத்து உணவுகளை டீ குடிப்பதற்கு சிறிது இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்.
தயிர்
டீ அல்லது காபியுடன் தயிர் அல்லது தயிர் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. டீ உடலை சூடாக்கும், தயிர் குளிர்ச்சியைத் தரும். இந்த முரண்பாடான கலவையால் வயிற்று எரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்துவது நல்லது.
பிஸ்கட்
பலர் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதுவும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிஸ்கட்களில் மைதா, சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இவை டீயுடன் சேரும்போது இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம்.

