- Home
- உடல்நலம்
- நெஞ்சு வலிக்கு கேஸ் மாத்திரை போடுகிறீர்களா? அலட்சியம் அதீத ஆபத்து.. மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி!
நெஞ்சு வலிக்கு கேஸ் மாத்திரை போடுகிறீர்களா? அலட்சியம் அதீத ஆபத்து.. மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி!
Heart Attack: இப்போது குறைந்த வயதுடையவர்களையும் மாரடைப்பு தாக்கி வருகிறது. நெஞ்சு வலி வந்தால் அலட்சியப்படுத்தாமல் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பார்க்கலாம்.

நெஞ்சு வலிக்கு கேஸ் மாத்திரை போடுகிறீர்களா?
சிலருக்கு திடீரென நெஞ்சை அடைப்பது போன்ற வலியும், மூச்சு விட சிரமமும் ஏற்படலாம். நிறைய பேர் இதை கேஸ் ட்ரபிள் அல்லது உடல் சோர்வு என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால், இந்த சின்ன தப்பு உயிரையே பறித்துவிடும். மாரடைப்பு என்பது இப்போது வயதானவர்களுக்கு வரும் நோய் கிடையாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 30 முதல் 40 வயதுடையவர்களுக்கும் மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது. அதனால் இது குறித்து ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?
எல்லா மாரடைப்புக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. ஆனால் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன.
1. நெஞ்சு வலி: நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம், பாரமாக இருப்பது, எரிச்சல் அல்லது முறுக்குவது போன்ற வலி 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உஷாராகுங்கள்.
2. வலி பரவுதல்: இடது கை, கழுத்து, தாடை, முதுகு அல்லது வயிற்றின் மேல் பகுதிக்கு வலி பரவலாம்.
3. மூச்சுத்திணறல்: திடீரென மூச்சு விட சிரமமாக இருக்கும், மூச்சு முட்டுவது போல் தோன்றும்.
4. மற்ற அறிகுறிகள்: அதிகமாக வியர்ப்பது, வாந்தி வருவது போன்ற உணர்வு, தலைசுற்றல், மயக்கம், நெஞ்சு படபடப்பு.
பெண்களுக்கு அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். முதுகு அல்லது தாடையில் வலி, வழக்கத்திற்கு மாறான சோர்வு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
1. தாமதிக்க வேண்டாம், உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள். இதுதான் ரொம்ப முக்கியம். வலியை அலட்சியப்படுத்தாதீர்கள். உடனே 102 அல்லது 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்யுங்கள். அல்லது பக்கத்தில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள். பண்டிகை கூட்டத்தில் நீங்களே வண்டி ஓட்டிக்கொண்டு போக வேண்டாம்.
2. நோயாளியை உட்கார வைத்து அமைதிப்படுத்துங்கள்: நோயாளியை தரையிலோ அல்லது நாற்காலியிலோ உட்கார வையுங்கள். மூச்சுத்திணறல் இருந்தால் படுக்க வைக்க வேண்டாம். இறுக்கமான உடைகளை தளர்த்தி விடுங்கள். காத்து வர வசதியாக கூட்டத்தை விலக்கி விடுங்கள்.
3. நீங்களாகவே மருந்து சாப்பிட வேண்டாம்: மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே எந்த மருந்தையும், குறிப்பாக கேஸ் மாத்திரைகளை சாப்பிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். நோயாளிக்கு ஏற்கனவே இதயப் பிரச்சனை இருந்து, மருத்துவர் Sorbitrate போன்ற மாத்திரைகளை பரிந்துரைத்திருந்தால் மட்டும் அதை கொடுங்கள்.
4. CPR தெரிந்திருந்தால்: நோயாளி மயக்கமடைந்து மூச்சு விடுவது நின்றுவிட்டால், உங்களுக்கு CPR செய்ய தெரிந்திருந்தால் உடனே தொடங்குங்கள். மருத்துவ உதவி வரும் வரை அதை செய்து கொண்டே இருங்கள்.
என்ன செய்யக் கூடாது?
நோயாளியை நடக்க வைக்கவோ அல்லது தனியாக விட்டுச் செல்லவோ கூடாது. தண்ணீர் அல்லது சாப்பாடு கொடுக்கக் கூடாது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" என்று நினைத்து வீட்டில் காத்திருக்க வேண்டாம். மாரடைப்பில் ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப முக்கியம்.
உஷாராக இருங்கள்
அதிகமாக எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது, கண் விழிப்பது, கூட்டத்தில் ரொம்ப நேரம் நடப்பது, மன அழுத்தம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

