- Home
- உடல்நலம்
- AI Cancer Prediction: ஒரு செல்ஃபி போதும்... கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்!
AI Cancer Prediction: ஒரு செல்ஃபி போதும்... கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்!
AI Cancer Prediction: புற்றுநோய் நோயாளிகளின் செல்ஃபியை வைத்து, அவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் உயிர்வாழ்வார்கள் என்பதைக் கண்டறியும் புதிய AI செயலியை மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்
ஒரு சாதாரண செல்ஃபி புகைப்படத்தை பார்த்து, புற்றுநோய் நோயாளி இன்னும் எத்தனை நாட்கள் வாழ்வார் என்று கூற முடியுமா? கேட்கவே ஆச்சரியமாக இருந்தாலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இது சாத்தியம் என்று கூறுகின்றனர்.
போஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் பிரிகாம் விஞ்ஞானிகள், முகத்தைப் பார்த்தே நோயாளியின் உயிரியல் வயதையும், புற்றுநோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தையும் கணிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, அக்டோபர் 19, 2026 அன்று புகழ்பெற்ற 'தி லான்செட் டிஜிட்டல் ஹெல்த்' இதழில் வெளியாகியுள்ளது.
இந்த AI எவ்வாறு இயங்குகிறது?
இந்த அமைப்பின் பெயர் FAHR-Face (Foundation Artificial Intelligence for Health Recognition) என்பதாகும். ஆராய்ச்சியாளர்கள் சுமார் 4 கோடிக்கும் அதிகமான செல்பியை பயன்படுத்தி இந்த AI தொழில்நுட்பத்திற்குப் பயிற்சி அளித்துள்ளனர்.
FAHR-FaceAge: இது நோயாளியின் உயிரியல் வயதைக் கணக்கிடும். அதாவது, உடலின் உள்பகுதி எவ்வளவு முதிர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டும். இது பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் கணக்கிடப்படும் வயதிலிருந்து மாறுபடலாம். இதில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை மட்டுமே வேறுபாடு இருக்கும்.
FAHR-FaceSurvival: இது புற்றுநோய் நோயாளியின் புகைப்படத்தை வைத்து, அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை நேரடியாகக் கூறிவிடும். 34,363 புற்றுநோய் நோயாளிகளின் புகைப்படங்களை வைத்து இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், புள்ளிகள் அதிகமாக இருந்த நோயாளிகளில் 52.5% பேர் (122 பேரில் 64 பேர்) புகைப்படம் எடுத்த 90 நாட்களுக்குள்ளேயே உயிரிழந்துவிட்டனர். அதேவேளையில், புள்ளிகள் மிகவும் குறைவாக இருந்தவர்களில் 2.1% பேர் மட்டுமே 90 நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
முகத்தில் எந்தப் பகுதியை AI கவனிக்கிறது?
இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முகத்தில் உள்ள தனித்தனிப் பகுதிகளை ஆராய்ந்தே AI இந்த முடிவுக்கு வருகின்றது.
வயதைக் கணிக்க: மூக்கிலிருந்து உதடு வரை உள்ள சுருக்கங்கள் நெற்றி, மற்றும் காதுக்கு அருகில் உள்ள நெற்றிப்பொட்டுப் பகுதி ஆகியவற்றை AI கவனிக்கிறது.
உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் கணிக்க: கண்ணிற்குக் கீழே உள்ள பகுதி, மூக்கின் தண்டுப் பகுதி ஆகியவற்றை AI ஆராய்கிறது.
அதிகமாகப் புகையிலை, மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தும் வழக்கமுள்ளவர்களின் முகம், உயிரியல் ரீதியாக மிகவும் முதிர்ந்தது போல் தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உண்மையான வயதை விட முகம் 5 ஆண்டுகள் முதிர்ச்சியாகத் தெரிந்தால், அவர்களுக்கு இறப்பு அபாயம் 21% அதிகமாகும். அதுவே 5 ஆண்டுகள் இளமையாகத் தெரிந்தால், அபாயம் 17% குறைகின்றது.
மருத்துவருக்கு மாற்றல்ல, ஆனால் உதவியாக இருக்கும்
"மருத்துவர்கள் நோயாளியைப் பார்த்து அவர்களின் ஆயுளைக் கணிக்க முயற்சிப்பார்கள். ஆனால், அதைத் துல்லியமாகக் கூறுவதில் நாங்கள் அவ்வளவு திறமையானவர்கள் அல்ல. உடல் தகுதியில் உள்ள அந்த இடைவெளியை AI எளிதாகக் கண்டறிந்துவிடும்," என்று ஆராய்ச்சியாளர் மருத்துவர் ரேமண்ட் மேக் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் கருவியை உடனடியாக மருத்துவமனைகளில் பயன்படுத்த மாட்டார்கள். இது மருத்துவரின் முடிவை மாற்றாது. மாறாக, எந்த நோயாளிக்குக் கடுமையான வேதிச்சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவை, யாருக்குச் சாதாரண சிகிச்சை போதும் என்ற தனிப்பட்ட முடிவுகளை எடுக்க மருத்துவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். நெதர்லாந்தில் உள்ள 4,892 நோயாளிகளிடமும் இந்த மாதிரி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








