- Home
- உடல்நலம்
- உணவு
- Vazhaithandu Kootu : வாழைத்தண்டு கூட்டு இப்படி செஞ்சு பாருங்க.. சாம்பார், ரசம் இல்லாமலேயே சாதம் காலியாகிடும்!
Vazhaithandu Kootu : வாழைத்தண்டு கூட்டு இப்படி செஞ்சு பாருங்க.. சாம்பார், ரசம் இல்லாமலேயே சாதம் காலியாகிடும்!
Vazhaithandu Kootu : வாழைத்தண்டில் வழக்கமாக பொரியல் செய்வதற்குப் பதிலாக சுவையான கூட்டு செய்து பாருங்கள். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய், சீரகம் சேர்த்து செய்யும் இந்த வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி?
வாழைத்தண்டு என்றாலே பொரியல், மோர் குழம்பு என ஒரே மாதிரி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியென்றால், இந்த முறை வீட்டில் இருக்கும் பருப்பு, தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து அசத்தலான வாழைத்தண்டு கூட்டு செய்து பாருங்கள்.
மென்மையாக வெந்த வாழைத்தண்டுடன், பருப்பின் மணமும் தேங்காய் அரைப்பின் சுவையும் சேரும்போது சாதத்துடன் பிசைந்து சாப்பிட இன்னும் கொஞ்சம் சாதம் கேட்கும். மதிய உணவுக்கு சாம்பார், ரசம், பொரியல் என எதைச் செய்தாலும் அதற்குத் துணையாக இந்தக் கூட்டு அட்டகாசமாக இருக்கும்.
சுவையோடு நார்ச்சத்தும் நிறைந்த வாழைத்தண்டை குடும்பத்தினர் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இப்படிச் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- பாசிப்பருப்பு - 1\4 கப்
- கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 10 (அல்லது 1 பெரிய வெங்காயம்)
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 4 பல்
- மஞ்சள் தூள் - 1\4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- நெய் - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- துருவிய தேங்காய் - 1\2 கப்
- சீரகம் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க
- தேங்காய் எண்ணெய் - 1 1\2 தேக்கரண்டி
- கடுகு - 1\2 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1\2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி? படி 1
பருப்பு வேகவைத்தல்
முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
படி 2
வாழைத்தண்டை சுத்தம் செய்தல்
வாழைத்தண்டின் வெளிப்புற நார்களை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். இதனால் வாழைத்தண்டு கருப்பாக மாறாமல் இருக்கும்.
படி 3
தாளித்து வெங்காயம் வதக்குதல்
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இடித்து வைத்த பூண்டைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
படி 4
தக்காளி மற்றும் வாழைத்தண்டு சேர்த்தல்
இப்போது நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாகக் குழையும்வரை வதக்கவும்.
மோர் தண்ணீரில் வைத்த வாழைத்தண்டை வடித்து கடாயில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வாழைத்தண்டு மென்மையாக வேகும் வரை சமைக்கவும்.
படி 5
பருப்பு சேர்த்தல்
வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் ஏற்கெனவே வேகவைத்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இப்போது பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
படி 6
தேங்காய் அரைப்பை சேர்த்தல்
துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த கலவையை கூட்டில் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
படி 7
இறுதியாக நெய் சேர்த்தல்
கூட்டு தேவையான பதத்திற்கு வந்ததும் நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான, மணமான வாழைத்தண்டு கூட்டு தயார்.
சுவையான வாழைத்தண்டு கூட்டு செய்ய சில குறிப்புகள்
- வாழைத்தண்டை நறுக்கியவுடன் மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- வாழைத்தண்டின் நார்களை முழுமையாக நீக்கினால் சாப்பிடும்போது சிரமம் இருக்காது.
- பருப்பை அதிகமாகக் குழையவிடாமல், மென்மையான பதத்தில் வேகவைத்தால் கூட்டு சுவையாக இருக்கும்.
- தேங்காய் அரைப்பைச் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.
- காரம் அதிகம் விரும்பினால் பச்சை மிளகாயின் அளவை அதிகரிக்கலாம்.
- சின்ன வெங்காயம் சேர்த்தால் கூட்டுக்கு கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
எதனுடன் சாப்பிடலாம்?
சூடான சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து இந்த வாழைத்தண்டு கூட்டைப் பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இதனுடன் உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம், மோர் அல்லது ரசம் சேர்த்துப் பரிமாறலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த வாழைத்தண்டு கூட்டை ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்.





