- Home
- உடல்நலம்
- உணவு
- Plate Idli Without Idli Plate : தட்டு இல்லாமல் தட்டு இட்லி செய்யலாம்! குண்டான் இருந்தால் போதும்.. ஹோட்டல் ஸ்டைல் ரெசிபி!
Plate Idli Without Idli Plate : தட்டு இல்லாமல் தட்டு இட்லி செய்யலாம்! குண்டான் இருந்தால் போதும்.. ஹோட்டல் ஸ்டைல் ரெசிபி!
Plate Idli Without Plate : வீட்டில் தட்டு இட்லி பாத்திரம் இல்லையா? கவலை வேண்டாம். வழக்கமான இட்லி மாவு, குண்டான், பருத்தித் துணி இருந்தாலே போதும். தட்டு இல்லாமல் ஹோட்டல் ஸ்டைலில் மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தட்டு இல்லாமல் தட்டு இட்லி செய்வது எப்படி?
இட்லி என்றாலே வழக்கமான சிறிய இட்லிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஹோட்டலில் கிடைக்கும் மெத்தென்ற, சற்று பெரிய அளவிலான தட்டு இட்லியை வீட்டிலேயே செய்யலாம் . அதுவும் தட்டு இட்லி செய்வதற்கென்று தனியாக பாத்திரம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.
நம் வீட்டில் இருக்கும் குண்டான், இட்லித் துணி, வழக்கமாக இட்லி மற்றும் தோசைக்கு அரைக்கும் மாவு இருந்தாலே போதும். எளிமையான முறையில் ஆவியில் வேகவைத்து, மென்மையான தட்டு இட்லியை சுவையாகத் தயாரித்துவிடலாம்.
தட்டு இட்லி செய்ய தேவையான பொருட்கள்
- இட்லி மாவு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- இட்லித் துணி அல்லது சுத்தமான மெல்லிய பருத்தித் துணி - 1
- குண்டான் அல்லது பாத்திரம் - 1
- நூல் - கட்டுவதற்கு
குறிப்பு: வீட்டில் வழக்கமாக இட்லி செய்வதற்குப் பயன்படுத்தும் புளித்த மாவையே பயன்படுத்தலாம். தனியாக மாவு அரைக்க வேண்டிய அவசியமில்லை.
தட்டு இல்லாமல் தட்டு இட்லி செய்வது எப்படி? படி 1
முதலில் உறுதியான குண்டான் அல்லது பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் சுமார் 2-3 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் குண்டானை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்து ஆவி வரத் தொடங்கியதும் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
படி 2
குண்டானின் வாயில் துணியைக் கட்டவும்
சுத்தமான, மெல்லிய பருத்தித் துணி அல்லது இட்லித் துணியை எடுத்துக்கொள்ளவும். துணி குண்டானின் வாய்ப்பகுதியை முழுவதுமாக மூடும் அளவுக்கு இருக்க வேண்டும். குண்டானின் வாயில் துணியை விரித்து, அதன் ஓரங்களை வெளிப்புறமாக மடித்து, தடிமனான நூல் கொண்டு இறுக்கமாகக் கட்டிக்கொள்ளவும்.
துணி அடுப்பின் தீயில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முன்பாக துணியை நன்றாகச் சுத்தம் செய்து அலசி வைத்திருக்க வேண்டும்.
படி 3
இட்லி மாவைத் தயார் செய்யவும்
வழக்கமாக இட்லி செய்வதற்குப் பயன்படுத்தும் புளித்த மாவையே பயன்படுத்தலாம். மாவை அதிகமாக அடித்துக் கலக்காமல் மெதுவாகக் கலப்பது நல்லது. இதனால் மாவில் இருக்கும் காற்றுத் தன்மை குறையாமல், இட்லி மென்மையாக வர உதவும்.
துணியின் மேல் மாவை ஊற்றவும்
குண்டானில் இருந்து ஆவி வந்துகொண்டிருக்கும் நிலையில், கட்டப்பட்ட துணியின் மேல் இட்லி மாவை மெதுவாக ஊற்றவும். சிறிய இட்லிகளைப் போல இல்லாமல், சற்று பெரிய அளவில் மாவை ஊற்றி தட்டு இட்லி வடிவில் பரப்பிக்கொள்ளவும்.
படி 4
மூடி வைத்து ஆவியில் வேகவைக்கவும்
மாவை ஊற்றியதும் ஒரு பெரிய மூடியால் மூடி, மிதமான தீயில் ஆவியில் வேகவைக்கவும். மாவின் அளவைப் பொறுத்து சுமார் 10-15 நிமிடங்கள் ஆகலாம்.
படி 5
இட்லி வெந்ததா எனச் சரிபார்க்கவும்
இட்லியின் நடுப்பகுதியில் சுத்தமான குச்சி அல்லது டூத் பிக்கைச் செருகிப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி வெந்துவிட்டது. மாவு ஒட்டினால் மேலும் 3 -5 நிமிடங்கள் வேகவைக்கவும். இட்லி நன்றாகப் பஞ்சு போல உப்பி, மேற்பரப்பு உறுதியானதும் அடுப்பை அணைக்கலாம்.
படி 6
பரிமாறவும்
அடுப்பை அணைத்து, இட்லியைச் சுற்றி கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும். இட்லி உப்பி வரும். இந்த நேரத்தில் தோசை திருப்பி வைத்து இட்லியை உடைக்காமல் துணியிலிருந்து மெதுவாக எடுக்கவும். அவ்ளோதான் தட்டு இட்லி தயார்.
சுவையான தட்டு இட்லிக்கு சில குறிப்புகள்
- இட்லி மாவு மிகவும் தண்ணீராக இல்லாமல், வழக்கமான இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- மாவை அதிகமாக ஊற்றாமல், சீரான தடிமனில் பரப்பவும்.
- துணி குண்டானின் வாயில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
- இட்லி வெந்ததும் உடனே எடுக்காமல் ஓரிரு நிமிடங்கள் ஆறவிட்டு எடுத்தால் எளிதாக வரும்.
- குண்டானில் போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். வேகும்போது தண்ணீர் முழுவதும் வற்றிவிடக் கூடாது.
எதனுடன் சாப்பிடலாம்?
இந்த மென்மையான தட்டு இட்லியை தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ஹோட்டல் ஸ்டைல் தட்டு இட்லியை வீட்டிலேயே, தனி பாத்திரம் வாங்காமல் செய்து அசத்தலாம்.
தட்டு இட்லிக்கென்று தனிப் பாத்திரம் இல்லாதவர்கள் இந்த முறையை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் துணி குண்டானின் வாயில் பாதுகாப்பாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும்; ஆவி வெளியேறாமல் மூடி வைத்து வேகவைப்பதே மென்மையான இட்லிக்கான முக்கிய ரகசியம்.

