- Home
- உடல்நலம்
- உணவு
- Maravalli Kizhangu Kanji: மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி.. இந்த ருசியான ரெசிபியை இப்படிச் செய்து பாருங்க!
Maravalli Kizhangu Kanji: மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி.. இந்த ருசியான ரெசிபியை இப்படிச் செய்து பாருங்க!
Maravalli Kizhangu Kanji: மரவள்ளிக்கிழங்கு, முருங்கைக்கீரை, தேங்காய்ப்பால் சேர்த்து மணமணக்கும் தண்ணீர் கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவை கூடுவதற்கான குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி
ஒரே மாதிரியான காலை உணவைச் சாப்பிட்டுச் சலித்துவிட்டதா? அப்படியானால், மரவள்ளிக்கிழங்கு, முருங்கைக்கீரை, தேங்காய்ப்பால் ஆகியவற்றைக் கொண்டு மணக்க மணக்க ஒரு பாரம்பரியக் கஞ்சியைச் செய்து பாருங்கள்.
மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு என இயற்கையான மணம் தரும் பொருட்கள் சேர்வதால், இதன் சுவை வழக்கமான கஞ்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும்.
மென்மையாக வெந்த மரவள்ளிக்கிழங்குடன் சத்துகள் நிறைந்த முருங்கைக்கீரையும், கெட்டியான தேங்காய்ப்பாலும் இணையும் இலங்கை யாழ்ப்பாணப் பாரம்பரிய மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி, எளிய பொருட்களில் வயிறு நிறையச் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு. குறிப்பாக, பாரம்பரிய உணவுகளை விரும்புபவர்கள் வீட்டிலேயே செய்து சுவைக்கக்கூடிய ஒரு வித்தியாசமான ரெசிபி இது.
அப்படியென்றால், இந்தக் கஞ்சியைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? சரியான பதத்தில் சுவையாகச் செய்வது எப்படி? இந்த உணவின் பாரம்பரியம் பின்னணி என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்
- முருங்கைக்கீரை - 1 கப்
- கெட்டியான தேங்காய்ப்பால் - 1\2 கப்
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- மிளகு - 1\2 டீஸ்பூன்
- சீரகம் - 1\2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 முதல் 6
- பூண்டு - 4 பற்கள்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி செய்வது எப்படி?
மரவள்ளிக்கிழங்கைத் தயார் செய்தல்
மரவள்ளிக்கிழங்கின் தோலை முழுமையாக நீக்கி, நன்றாகக் கழுவித் துருவிக்கொள்ளவும். துருவிய கிழங்கில் உள்ள தண்ணீரை பிழிந்துக்கொள்ளவும். அடுத்தது முருங்கைக்கீரையின் காம்புகளை நீக்கி, இலைகளைத் தனியாக உருவி நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
படி 1
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்தல்
குக்கரில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, அது நன்கு வேகும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். குக்கரை மூடி, சுமார் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். அழுத்தம் முழுமையாகக் குறைந்த பிறகு திறந்து, கிழங்கை மசித்துக்கொள்ளவும்.
படி 2
மசாலாவைத் தட்டுதல்
உரலில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றிரண்டாகத் தட்டிக்கொள்ளவும். இவற்றை மிக நைசாக அரைக்க வேண்டியதில்லை. லேசாகத் தட்டினால் மசாலாவின் மணம் நன்றாக வெளிப்படும்.
படி 3
மசாலாவை வதக்குதல்
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டிவைத்த மசாலாவைச் சேர்க்கவும். பச்சை வாசனை நீங்கும் வரை சுமார் ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
படி 4
முருங்கைக்கீரையைச் சேர்த்தல்
வதக்கிய மசாலாவுடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து சுமார் 2 -3 நிமிடங்கள் வதக்கவும். கீரை சுருங்கி வெந்ததும், ஏற்கெனவே மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
படி 5
தேங்காய்ப்பால் சேர்த்தல்
தேவையான அளவு வெந்நீர் சேர்த்து கஞ்சியை விரும்பிய பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கெட்டியான தேங்காய்ப்பால், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். நன்றாகக் கலந்து சூடானதும் அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு முருங்கைக்கீரை தண்ணீர் கஞ்சி தயார். இதனைச் சூடாகப் பரிமாறலாம். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
சுவை நன்றாக வர சில முக்கியக் குறிப்புகள்
- மரவள்ளிக்கிழங்கின் தோலை முழுமையாக நீக்கி, கிழங்கை நன்றாகச் சுத்தம் செய்து முழுமையாக வேகவைக்கவும்.
- முருங்கைக்கீரையை அதிக நேரம் வதக்காமல், நன்றாக வெந்ததும் அடுத்த பொருட்களைச் சேர்க்கவும்.
- தேங்காய்ப்பாலை இறுதியில் சேர்ப்பதால் அதன் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
- தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக ஊற்றாமல், தேவைக்கேற்பச் சேர்த்து கஞ்சியின் பதத்தைக் கட்டுப்படுத்தவும்.
- மரவள்ளிக்கிழங்கில் இயற்கையாக இருக்கக்கூடிய சயனோஜெனிக் சேர்மங்களைக் கருத்தில் கொண்டு, அதை ஒருபோதும் பச்சையாகச் சாப்பிட வேண்டாம். நன்கு சமைத்த பின்னரே சாப்பிடவும்.

