- Home
- உடல்நலம்
- உணவு
- 7 Most Dangerous Foods: சாப்பிடுவது சுகம்.. பறிப்பது நரகம்: ஒரு நொடி பிசகினாலும் உயிருக்கே உலைவைக்கும் 7 விசித்திர உணவுகள்!
7 Most Dangerous Foods: சாப்பிடுவது சுகம்.. பறிப்பது நரகம்: ஒரு நொடி பிசகினாலும் உயிருக்கே உலைவைக்கும் 7 விசித்திர உணவுகள்!
சுவைப்பது சுகம், அறுவடை மரண பயம். மேட் ஹனி முதல் விஷ மீன் வரை, ஒரு நொடி கவனக்குறைவும் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய 7 விசித்திர உணவுகளின் பின்னணி குறித்து பார்ப்போம்.

உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்படும் 7 விசித்திர உணவுகள்!
நாம் உணவகங்களில் அமர்ந்து சுவைக்கும் பல உணவுகள், நம் தட்டுக்கு வருவதற்கு முன் எவ்வளவு பெரிய மரணப் போராட்டத்தைக் கடந்து வருகின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இவற்றைச் சமைப்பது சவாலானது மட்டுமல்ல; சேகரிப்பதே ஒரு சாகசப் பயணம். இமயமலையின் செங்குத்துப் பாறைகளில் கயிறு கட்டி அந்தரத்தில் தொங்குவது, விஷ நச்சுக்கள் நிறைந்த அடர்ந்த காடுகளைத் துழாவுவது, தொட்டாலே தோலைத் தீய்க்கும் ரசாயனங்களைக் கையாள்வது என... காட்டில் தொடங்கி சாப்பாட்டு மேசை வரை ஒரு த்ரில்லர் சினிமா போல விரியும் அந்த 7 ஆபத்தான உணவுகள் இதோ!
1. மேட் ஹனி: மயக்கும் தேனா... மரணப் பொறியா?
இமயமலையின் நூற்றுக்கணக்கான அடி உயர செங்குத்துப் பாறைகள்... கீழே பார்த்தால் பாதாளம்! அந்தரத்தில் வெறும் கயிற்றேணியில் தொங்கிக்கொண்டு, ராட்சதக் காட்டுத் தேனீக்களின் கூடுகளைக் குறிவைக்கிறார்கள் நேபாளத் தேன் வேட்டையாளர்கள்.
ஆனால், பாறையிலிருந்து கீழே விழுவது மட்டுமே இங்கு ஆபத்து அல்ல. 'ரோடோடென்ட்ரான்' என்ற நச்சுப் பூக்களிலிருந்து இந்தத் தேனீக்கள் தேன் எடுப்பதால், அந்தத் தேனில் 'கிரயானோடாக்சின்' என்ற கொடிய நஞ்சு கலக்கிறது. இதை ஒரு ஸ்பூன் சுவைத்தாலே தலைசுற்றும், ரத்த அழுத்தம் அதலபாதாளத்திற்குப் போகும், இதயத் துடிப்பு முடங்கிவிடும்! மலரில் தொடங்கி, தேனீ வழி கடந்து, பாட்டிலுக்குள் நஞ்சாக அடங்கும் ஒரு த்ரில்லர் கதை இது.
2. டுட்டின் தேன்: ஒரு சிறிய பூச்சி நடத்தும் ரசாயன யுத்தம்!
நியூசிலாந்திலும் ஒரு ஆபத்தான தேன் ரகம் உண்டு; இதன் பின்னணி இன்னும் விசித்திரமானது. அங்குள்ள 'டுட்டு' என்ற செடியில் 'டுட்டின்' என்ற ஆபத்தான நரம்பு நஞ்சு இருக்கிறது. ஆனால், தேனீக்கள் இந்தச் செடியிடம் நேரடியாகச் செல்வதில்லை.
அங்குள்ள தாவரச் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் மிகச் சிறிய வகை பூச்சிகள் வெளியேற்றும் ஒருவித இனிப்புக் கழிவைத்தான் தேனீக்கள் சேகரிக்கின்றன. அதில்தான் அந்த நரம்பு நஞ்சு தேனோடு கலக்கிறது! வெப்பமும் வறட்சியும் கூடும்போது இதன் ஆபத்து இரட்டிப்பாகும். இதைச் சாப்பிட்டால் வலிப்பு வரும், நரம்புகள் செயலிழக்கும், மரணமும் நிகழலாம். தேன் எடுப்பவர் தேனீக்களை மட்டுமல்ல... ஒரு சின்னஞ்சிறு பூச்சி என்ன சாப்பிட்டது என்பதையும் கண்காணிக்க வேண்டிய விநோதம் இது!
3. ஃபுகு மீன்: தட்டிலும் விஷம்... தொட்டாலும் விஷம்!
ஜப்பானியர்களின் ஆடம்பர உணவான 'ஃபுகு' (பஃபர்ஃபிஷ்) மீனைச் சமைப்பது சவாலானது என்பது உலகறிந்த விஷயம். ஆனால், பிடிக்கும்போதே இதன் ஆபத்து தொடங்கிவிடுகிறது.
இதன் கல்லீரல், சினைப்பை, குடல் போன்ற உறுப்புகளில் 'டெட்ரோடோடாக்சின்' என்ற பயங்கரமான நஞ்சு ஒளிந்திருக்கிறது. கையாள்வதில் சிறு பிசிறு ஏற்பட்டாலும், இதன் விஷம் உடலை மரத்துப்போகச் செய்யும், கை-கால்களைப் பக்கவாதத்தில் முடக்கும், மூச்சுவிட முடியாமல் திணறடித்துவிடும். இயற்கை இந்த மீனுக்கு அளித்த தற்காப்பு அரண்தான், மனிதர்களின் விலையுயர்ந்த தட்டுக்கு வரும் வரை மரண பயத்தைக் காட்டுகிறது.
4. முந்திரி: வறுத்தால் மொறுமொறு... பறித்தால் ரசாயன தீக்காயம்!
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, வறுத்து உப்பு தூவித் தரும் முந்திரிப்பருப்பை நாம் ஆசையாகக் கொறிக்கிறோம். ஆனால், மரத்திலிருந்து பறிக்கப்படும் பச்சை முந்திரியின் உண்மை முகம் பயங்கரமானது!
பச்சை முந்திரியின் ஓட்டைச் சுற்றி ஒருவித திரவம் சுரக்கிறது. விஷப் படர்க்கொடிகளில் காணப்படும் கொடிய வேதிப்பொருட்கள் அதில் உண்டு. பாரம்பரிய முறையில் இதன் ஓட்டை உடைத்து எடுக்கும் தொழிலாளர்களின் கைகளில் அந்தத் திரவம் பட்டால், சருமம் வெந்து கடுமையான ரசாயன தீக்காயங்கள் உண்டாகும். நாம் சுவைக்கும் முந்திரி, கொடூரமான ஒரு மூலப்பொருளின் விஷத்தை வடித்து எடுக்கப்பட்ட இறுதி வடிவம் மட்டுமே!
5. கடல் முள்ளெலி: கடலுக்கடியில் வாழும் 'ஊசிக்குஷன்'!
சீ அர்ச்சின் எனப்படும் கடல் முள்ளெலியின் உள்ளே இருக்கும் ஆரஞ்சு-மஞ்சள் நிற 'ஊனி' (Uni) பகுதி, உலகெங்கும் அசைவப் பிரியர்கள் தேடித்தேடிச் சுவைக்கும் சொகுசு உணவு.
ஆனால், இதைப் பறிக்க வேண்டுமானால் பாறைகள் நிறைந்த கொந்தளிக்கும் ஆழ்கடலில் மூழ்க வேண்டும். அதைவிடக் கொடுமை, இந்த உயிரினத்தின் உடலெங்கும் எளிதில் உடையக்கூடிய கூர்மையான முட்கள் நிறைந்திருக்கும். தவறித் தொட்டால்கூட முட்கள் சதையைத் துளைத்து, உடைந்து உள்ளேயே சிக்கிக்கொள்ளும். தட்டில் வைக்கும்போது பஞ்சு போல மிருதுவான உணவு... கடலில் கிடக்கும்போதோ தொட்டாலே கிழிக்கும் முள்ளம்பன்றி வடிவம்!
6. ஆர்கன் பழம்: ஆடுகள் மரமேறி தரும் ஆச்சரிய எண்ணெய்!
சமையலுக்கும் முகப் பொலிவிற்கும் உலகளவில் பயன்படுத்தப்படும் காஸ்ட்லியான ஆர்கன் எண்ணெய் எப்படி தயாராகிறது தெரியுமா? இதற்கு ஆடுகள்தான் மெயின் பார்ட்னர்.
மொராக்கோ நாட்டில், ஆடுகள் உயரமான ஆர்கன் மரங்களின் கிளைகளில் ஏறி நின்று இந்தப் பழங்களைத் தின்னும். ஆனால், அதன் கடினமான விதைகளை ஆடுகளின் வயிறுகளால் செரிக்க முடியாது. அவை சாணத்தின் வழியாக வெளியே வந்ததும், மனிதர்கள் அந்த விதைகளைச் சேகரித்து எண்ணெய் எடுக்கிறார்கள்! மரத்தை உலுக்கியும் பழங்கள் எடுக்கப்பட்டாலும், ஆடுகள் மரமேறித் தரும் இந்த அறுவடை முறைதான் உலகிலேயே மிக விநோதமான, விலையுயர்ந்த உணவுத் தயாரிப்பு பார்ட்னர்ஷிப்.
7. காட்டு காளான்கள்: அமிர்தமும் இதுவே... ஆலகாலமும் இதுவே!
காடுகளில் கிடைக்கும் காளான்களைப் பறிப்பது, சமையல் அறிவை விட அனுபவ அறிவை அதிகம் கோரும் ஒரு கலை. ஏனென்றால், உண்ணக்கூடிய காளான்களுக்குப் பக்கத்திலேயே, சாப்பிட்டால் அடுத்த நொடியே உயிரைப் பறிக்கும் கொடிய நச்சுக் காளான்களும் ஒட்டிப் பிறந்தது போல ஒரே மாதிரியாக வளரும்.
சிறிது பிசகினாலும் மரணம் நிச்சயம் என்பதால், அனுபவம் வாய்ந்தவர்கள் காளானின் குடைப் பகுதி, தண்டு, செவுள்கள், நிறம், அது வளரும் மரத்தின் வகை, சீசன் என அத்தனையையும் ஊடுருவிப் பார்த்துத்தான் தொடுவார்கள். சாதாரண புகைப்படங்களையோ யூகங்களையோ நம்பிப் பறிக்கவே மாட்டார்கள். ஏனெனில், பார்க்க மிகச் சாதாரணமாகவும் அழகாகவும் இருக்கும் ஒரு காளான், ஒரு மனிதனின் மூச்சையே நிறுத்தும் விஷத்தைக் கொண்டிருக்கலாம்.

