Vathal Kulambu: அட்டகாசமான கல்யாண வீட்டு ஸ்டைல் வத்தக்குழம்பு செய்வது எப்படி?
Vathal Kulambu: கல்யாண வீட்டு சுவையில் மணமணக்கும் வத்தக்குழம்பு செய்ய வேண்டுமா? சுண்டக்காய் வத்தல், நல்லெண்ணெய், புளி, சின்ன வெங்காயம், பூண்டு, மசாலா, வெல்லம் சேர்த்து கெட்டியாக சுண்டவைத்து செய்யும் சூப்பர் ரெசிபி இதோ.

கல்யாண வீட்டு ஸ்டைல் வத்தக்குழம்பு
கல்யாண வீட்டு சாப்பாட்டில் சாதம், பருப்பு, சாம்பார், ரசம் எல்லாவற்றையும் தாண்டி தனி மணத்தையும் ருசியையும் கொடுப்பது வத்தக்குழம்பு. சுடச்சுட சாதத்துடன் பரிமாறப்படும் புளிப்பும், காரமும், மணமும் நிறைந்த வத்தக்குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் தண்ணீர் ஊறும்.
அதே சுவையை வீட்டிலேயே, எளிய பொருட்களை வைத்து சமைக்க முடியும். குறிப்பாக நல்லெண்ணெயில் வத்தலை வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டு, புளி, மசாலா, தேங்காய் சேர்த்து சுண்டவைத்து செய்யும் வத்தக்குழம்புக்கு தனி ரசிகர்கள் உண்டு.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
- நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 11\2 டீஸ்பூன்
- துவரம் பருப்பு 1 1\2 டீஸ்பூன்
- குண்டு மிளகாய் – 3
- மிளகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் 1 டீஸ்பூன்
- சீரகம் - 1\2 டீஸ்பூன்
- மல்லி விதை - 2 டீஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- சின்ன வெங்காயம் - 5
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு கொத்து
குழம்பு செய்ய
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
- சுண்டக்காய் வத்தல் - 50 கிராம்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1\2 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத்தூள் - 1\4 டீஸ்பூன்
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
- வெல்லம் - ஒரு சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு
- கருப்பு எள் - 1 டீஸ்பூன்
- மொச்சைப் பருப்பு
- கத்தரிக்காய்
- முந்திரி
- கசகசா
செய்வது எப்படி?
வத்தக்குழம்பு பொடி தயாரிக்கவும்
- முதலில் புளியை சுமார் 2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து நன்றாகப் பிசைந்து கரைக்கவும். பின்னர் வடிகட்டி புளிச்சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாக சுண்டுவதற்கு புளிச்சாறு சற்று கெட்டியாக இருப்பது நல்லது. அதோடு, மொச்சை பெருப்பை ஊறவைத்து வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மல்லி விதை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுக்கவும்.
- பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அடுப்பை அணைத்து, இந்த கலவையை ஆற விடவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் மசாலா சேர்க்கவும்
- கனமான வாணலியை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் சுண்டக்காய் வத்தலை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். வத்தல் கருகிவிடாமல் கவனமாக வறுக்க வேண்டும். வறுத்த வத்தலை தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே எண்ணெயில் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம், கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கினால் குழம்புக்கு நல்ல மணம் கிடைக்கும்.
- இப்போது நறுக்கிய தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். இந்த நிலையில் தீயை குறைத்து, மசாலா கருகாமல் நன்றாகக் கிளறவும்.
- முன்பு அரைத்து வைத்துள்ள தேங்காய்-மசாலா விழுதை வாணலியில் சேர்க்கவும். இதோடு ஊரவைத்து வேகவைத்த மொச்சை பருப்பை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் நன்றாகக் கிளறி வதக்கவும். இதனால் பச்சை வாசனை நீங்கி, மசாலாவின் மணம் எண்ணெயுடன் நன்றாக கலக்கும்.
புளிச்சாறு ஊற்றி கொதிக்க விடவும்
- இப்போது தயாராக வைத்துள்ள புளிச்சாறை ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போடவும். குழம்பை மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும். இதோடு முந்திரி மற்றும் கசகசாவை அரைத்து சேர்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் கொதிக்கும்போது குழம்பு சற்று சுண்டி, எண்ணெய் மேலே வரத் தொடங்கும்.
- குழம்பு நன்றாக சுண்டியதும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் அதிகமாக இருக்கக் கூடாது. புளிப்பு, காரம், உப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் அளவுக்கு சிறிதளவு சேர்த்தால் போதும்.
- இப்போது முன்பு வறுத்து வைத்துள்ள சுண்டக்காய் வத்தலை குழம்பில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். வத்தல் குழம்பின் சுவையை நன்றாக உறிஞ்சும்.
கடைசி ஸ்பெஷல் டச் – எள் பொடி
கருப்பு எள்ளை தனியாக லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன் சுமார் 1 டீஸ்பூன் வறுத்த கருப்பு எள் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். இதுதான் இந்த வத்தக்குழம்புக்கு நல்ல மணமும் தனித்துவமான சுவையும் கொடுக்கும் முக்கியமான இறுதிக்கட்டம்.
எதனுடன் சாப்பிடலாம்?
சூடான சாதத்தில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இந்த வத்தக்குழம்பை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இதனுடன்:
- அப்பளம்
- உருளைக்கிழங்கு வறுவல்
- சேப்பங்கிழங்கு வறுவல்
- வாழைக்காய் வறுவல்
- பருப்பு துவையல்
- கூட்டு
- போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

