- Home
- உடல்நலம்
- உணவு
- Cooker Adhirasam : குக்கர்ல 3 விசில் விட்டா போதும்... டேஸ்டான தீபாவளி அதிரசம் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Cooker Adhirasam : குக்கர்ல 3 விசில் விட்டா போதும்... டேஸ்டான தீபாவளி அதிரசம் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Diwali Sweet Adhirasam Recipe : தீபாவளிக்கு ஏராளமான ஸ்வீட்கள் வீட்டிலேயே செய்வார்கள், அதில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட் என்றால் அது அதிரசம் தான். அது ஈஸியா வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Diwali Sweet Adhirasam Recipe
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமின்றி வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கும் தனி இடம் உண்டு. குறிப்பாக அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர் பாக் போன்ற பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளைச் செய்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுவது பலருக்கும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அந்த வகையில், தீபாவளி பலகாரங்களில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது அதிரசம்.
ஆனால், அதிரசம் செய்வதில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் வெல்லப்பாகு பதம்தான். பாகு சரியான பதத்தில் வந்தால்தான் அதிரசம் மென்மையாகவும் சுவையாகவும் கிடைக்கும். பாகு பதம் தவறினால் அதிரசம் கல்லைப் போலக் கடினமாகிவிடும் அல்லது எண்ணெயில் பிரிந்து போகும். இதனால் பலரும் வீட்டில் அதிரசம் செய்வதற்குத் தயங்குவார்கள்.
ஆனால், இனி அந்தக் கவலை வேண்டாம். குக்கரில் வெறும் மூன்று விசில் விட்டாலே அதிரசத்திற்குத் தேவையான வெல்லப்பாகை எளிமையாகத் தயாரித்துவிடலாம். பெரிய சிரமம் இல்லாமல், சரியான முறையைப் பின்பற்றினால் கடைகளில் கிடைப்பதைப் போலவே மென்மையான அதிரசத்தை வீட்டிலேயே செய்ய முடியும். அந்த ஈஸியான செய்முறையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அதிரசம் செய்யத் தேவையான பொருட்கள்!
- பச்சரிசி – 1 டம்ளர்
- வெல்லம் – முக்கால் டம்ளர்
- தண்ணீர் – தேவையான அளவு
- ஏலக்காய் – 4 முதல் 5
- சுக்கு – சிறிய துண்டு (விருப்பத்திற்கு)
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
- நெய் – சிறிதளவு
அதிரச மாவு தயாரிக்கும் முறை!
முதலில், அதிரசம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் அளவு பச்சரிசியை எடுத்துத் தண்ணீரில் நன்றாகக் கழுவி ஊற வைக்க வேண்டும். ரேஷன் அரிசியைப் பயன்படுத்துபவர்கள் அதில் இருக்கும் தூசிகளை நீக்கி நன்றாகச் சுத்தம் செய்த பிறகு ஊற வைக்கலாம்.
ஊற வைத்த அரிசியை ஒரு வடிகட்டியில் மாற்றி, அதிலுள்ள தண்ணீர் முழுவதும் வெளியேறும் வரை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 4 அல்லது 5 ஏலக்காய்களைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு சுக்கையும் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த மாவை நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மாவில் இருக்கும் பெரிய துகள்கள் நீங்கி, அதிரசம் மென்மையாகக் கிடைக்கும்.
குக்கரில் மூன்று விசில் விட்டால் வெல்லப்பாகு ரெடி!
அடுத்ததாக, அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் முக்கால் டம்ளர் அளவு வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். இதனுடன் கால் டம்ளருக்கும் சற்று குறைவான தண்ணீர் ஊற்றி லேசாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுவதுமாகக் கரைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெல்லம் லேசாகக் கரையும் அளவுக்குக் கலந்துவிட்டு குக்கரை மூடிவிடலாம். பின்னர் மிதமான தீயில் வைத்து மூன்று விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள பிரஷர் தானாகவே வெளியேற அனுமதிக்க வேண்டும். பிரஷரைத் தனியாக வெளியேற்றக் கூடாது. அது முழுமையாகக் குறைந்த பிறகு குக்கரைத் திறந்தால் அதிரசத்திற்குத் தேவையான வெல்லப்பாகு தயாராக இருக்கும். வெல்லத்தில் மண் அல்லது தூசு கலந்திருந்தால், தயாரான பாகை வடிகட்டி வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
மாவையும் வெல்லப்பாகையும் சரியான அளவில் கலக்க வேண்டும்!
இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் அரிசி மாவை வெல்லப்பாகில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் மாவு முழுவதையும் கொட்டிவிடாமல், சிறிது சிறிதாகச் சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகக் கிளற வேண்டும். மாவிலும் பாகிலும் கட்டிகள் இல்லாமல் ஒன்றோடு ஒன்று கலக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் மாவு முழுவதையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளலாம்.
மாவை உயர்த்தி ஊற்றிப் பார்க்கும்போது தொடர்ச்சியாக விழும் அளவுக்கு இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாகவோ அல்லது அதிகத் தண்ணீராகவோ இருக்கக் கூடாது. மாவின் அளவுக்கு ஏற்ப வெல்லப்பாகின் அளவைச் சரிசெய்து கொள்ள வேண்டும். பின்னர் தயாரான அதிரச மாவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் அப்படியே ஊற விட வேண்டும். இந்த இடைவெளியில் மாவு வெல்லப்பாகை நன்றாக உறிஞ்சி, இறுகிய பதத்திற்கு வந்துவிடும்.
அதிரசத்தைத் தட்டும் முறை!
இரண்டு நாட்களுக்குப் பிறகு மாவைத் திறந்து பார்த்தால், முன்பைவிட இறுக்கமான பதத்தில் இருக்கும். இப்போது மாவை கைகளால் லேசாகப் பிசைந்து ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், தேவையான அளவு மாவை எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளலாம். பொதுவாக ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு மாவு எடுத்தால் சரியான அளவில் அதிரசம் கிடைக்கும்.
ஒரு பட்டர் ஷீட், வாழை இலை அல்லது பாலித்தீன் கவரில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். அதேபோல் கைகளிலும் லேசாக எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு மாவை வட்டமாகத் தட்ட வேண்டும். அதிரசத்தின் நடுப்பகுதியில் சிறிய துளை போடலாம். விருப்பமில்லாதவர்கள் துளை போடாமலும் செய்யலாம். மாவு எல்லா இடங்களிலும் ஒரே அளவிலான தடிமனுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
குறைந்த தீயில் பொரித்தால் சாஃப்டான அதிரசம் ரெடி!
அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாகச் சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அடுப்பை மிகவும் குறைந்த தீயில் மாற்றிவிட்டு, தட்டி வைத்திருக்கும் அதிரசத்தை மெதுவாக எண்ணெயில் போட வேண்டும். வெல்லம் சேர்த்திருப்பதால் அதிகமான தீயில் பொரித்தால் அதிரசம் விரைவாகக் கருகிவிடும். ஆனால் உள்ளே சரியாக வேகாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த தீயிலேயே பொறுமையாகப் பொரிக்க வேண்டும்.
அதிரசம் எண்ணெயில் போட்டதும் இரண்டு பக்கங்களிலும் நன்றாக உப்பி வரும். இருபுறமும் பொன்னிறமாக மாறியதும் வெளியே எடுத்து எண்ணெயை வடித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்! சாஃப்டான, சுவையான அதிரசம் தயாராகிவிடும். இந்தத் தீபாவளிக்கு நீங்களும் வீட்டிலேயே இந்த முறையைப் பின்பற்றி அதிரசம் செய்து குடும்பத்தினருக்கு வழங்கிப் பாருங்கள்!





