- Home
- உடல்நலம்
- உணவு
- Fish Ambul Thiyal : ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் சூரை மீன் அம்புல் தீயல்..சுவை அள்ளும் செய்முறை இதோ!
Fish Ambul Thiyal : ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் சூரை மீன் அம்புல் தீயல்..சுவை அள்ளும் செய்முறை இதோ!
Fish Ambul Thiyal : ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் சூரை மீன் அம்புல் தீயல் செய்வது எப்படி? குடம்புளி, தேங்காய், மிளகு, சீரகம் உள்ளிட்ட மசாலாக்களை வறுத்துப் பொடியாக்கி சேர்த்து, மண் சட்டியில் மணக்க மணக்க சமைக்கும் சுவையான செய்முறை இதோ.

எண்ணெய் இல்லாமல் சூரை மீன் அம்புல் தீயல் செய்வது எப்படி?
ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காமலேயே சுவையான, சூரை மீன் அம்புல் தீயல் செய்யலாம். புளிப்பு, காரம், மிளகின் மணம் என ஒவ்வொரு சுவையும் நாவில் அசத்தும் இந்த அம்புல் தீயல், சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவில் புளிப்பு சுவைக்குப் பயன்படுத்தப்படும் குடம்புளி முக்கியமானது. எண்ணெய் சேர்க்காமல், எளிய பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த சுவையான மீன் அம்புல் தீயல் செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள். சுவையிலும் சமரசம் இல்லை, செய்முறையிலும் சிக்கல் இல்லை.
தேவையான பொருட்கள்
சூரை மீன் - 500 கிராம்
குடம்புளி - 5 முதல் 6 துண்டுகள்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8
மஞ்சள்தூள் - 1\2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1\2 டீஸ்பூன்
வெந்தயம் - 1\4 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பட்டை - சிறிய துண்டு
செய்முறை
முதலில் குடம்புளியைத் தயார் செய்யலாம்
குடம்புளியை நன்றாகக் கழுவி, சிறிதளவு வெந்நீரில் ஊறவைக்கவும். அது நன்றாக ஊறியதும் கைகளால் பிசைந்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பின்னர் வடிகட்டி, விதைகள் அல்லது தேவையற்ற துகள்கள் இல்லாமல் புளிக்கரைசலைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து சூரை மீனைத் தயாரிக்கவும்
சூரை மீனை நன்றாகச் சுத்தம் செய்து, மிதமான அளவிலான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மெதுவாகப் புரட்டி, சுமார் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
அம்புல் தீயலின் ஸ்பெஷல் மசாலா
ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் தனியா, சீரகம், மிளகு, வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுக்கவும். நல்ல மணம் வந்ததும் அடுப்பை மிதமாக்கவும்.
பின்னர் தேங்காய் துருவல் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலையைச் சேர்த்து, தேங்காயில் இருக்கும் ஈரம் முழுவதும் போகும் வரை வறுக்கவும். மசாலா கருகிவிடாமல் தொடர்ந்து கிளறுவது முக்கியம்.
வறுத்த பொருட்களை நன்றாக ஆறவிட்டு, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கொரகொரப்பான மசாலாதான் அம்புல் தீயலுக்கு நல்ல texture-ஐ கொடுக்கும்.
இப்போது மீனை மசாலாவுடன் சேர்க்கலாம்.
- தயார் செய்து வைத்திருக்கும் குடம்புளிக் கரைசலில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, ஊறவைத்த சூரை மீன் துண்டுகளையும் அதில் போட்டு மெதுவாகக் கலந்து விடவும்.
- மீன் மசாலாவில் நன்றாக ஊறுவதற்காக சில நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
மண் சட்டியில் சமைத்தால் சுவை இன்னும் கூடும்
- ஒரு மண் சட்டி அல்லது கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
- அதன் அடியில் ஒரு வாழை இலையை வைத்து, அதன் மேல் ஒரு கொத்து கறிவேப்பிலை தூவவும்.
- அதன் மீது மசாலாவில் ஊறவைத்த சூரை மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கவும்.
- மேலே நீளமாகக் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து, ஒரு சிறிய துண்டு பட்டையையும் போடவும்.
- மீதமுள்ள குடம்புளி மசாலாவையும் மீன் மீது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் சுமார் 20-25 நிமிடங்கள் சமைக்கவும்.
சூரை மீன் அம்புல் தீயல் தயார்
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மீன் அதிகமாகக் குழைந்து போகாமல், பாத்திரத்தை அடிக்கடி கிளறாமல் மெதுவாகவே சமைக்க வேண்டும்.
சுமார் 25 நிமிடங்களில் குடம்புளிக் கரைசலில் இருக்கும் நீர் வற்றத் தொடங்கி, மசாலா மீன் துண்டுகளில் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
குழம்பு போல நீராக இல்லாமல், மசாலா கெட்டியாகி மீன் மீது முழுவதுமாகப் படிந்து எண்ணெய் இல்லாமலேயே வறண்ட பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கலாம்.
அவ்வளவுதான், மணமணக்கும் ஒரு சொட்டு எண்ணெய் இல்லாத சூரை மீன் அம்புல் தீயல் தயார்.
தனி ருசி
சூடான சாதத்துடன் இதைச் சேர்த்து சாப்பிட்டால், குடம்புளியின் புளிப்பு, மிளகு சீரகத்தின் கார மணம், தேங்காயின் சுவை என ஒவ்வொரு கவளமும் அசத்தலாக இருக்கும். குறிப்பாக மசாலா மீனில் நன்றாக ஒட்டியிருப்பதால் சாப்பிடும்போது தனி ருசியே கிடைக்கும்.

