சூடிபிடித்த 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்கள் தேர்வு! இளம் நடிகையுடன் பேச்சு வார்த்தை.. வெளியான லிஸ்ட்
'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக, ப்ரோமோ வெளியிட்டு நிகழ்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ள நிலையில், தற்போது போட்டியாளர்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 முடிந்த கையேடு, பல ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து கேட்க துவங்கிவிட்டனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியாக துவங்கியதும்... இந்த முறை நான் நடுவர் இல்லை என கையை உயர்த்திய செஃப் வெங்கடேஷ் பட், விரைவில் வேறு ஒரு நிகழ்ச்சியில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் குக் வித் கோமாளி புரடியூசர் மற்றும் இயக்குனர் என அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பிரபலங்கள் விலகியதால் நிகழ்ச்சி துவங்குமா என்கிற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்... நேற்றைய தினம் புரோமோ ஒன்றை வெளியிட்டு விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள தகவலை உறுதி செய்தது. மேலும் இந்த முறை வெங்கடேஷ் பட்-க்கு பதில், பல பிரபலங்களின் ஃபேவரட் செஃப்பான மதம்பட்டி ரங்கராஜன் தாமுவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக பயணிக்க உள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில்... மற்றொருபுறம், இந்த முறை கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.
அந்த வகையில்.. ஏற்கனவே, நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக்பாஸ் சீசன் 7 பைனலிஸ்ட்டான விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்ஷதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள புதிய லிஸ்டில்... பிரபல youtuber மற்றும் ஹோட்டல் ரிவியுவரான இர்பான், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் இளம் நடிகை திவ்யா துரைசாமி ஆகியோருடன் முழு வீச்சில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் இருந்து குக் வித் கோமாளி துவங்கலாம் என கூறப்படும் நிலையில்... கூடிய விரைவில் போட்டியாளர்களின் முழு விவரமும் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.