Family Star OTT: விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது!
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாகூர் நடிப்பில் வெளியான, 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பல இளம் ரசிகர்களின் கனவு கண்ணனாக மாறிய விஜய் தேவார கொண்டா கடைசியாக சமீப காலமாக நடித்து வரும் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், சமந்தாவுடன் நடித்த குஷி படம் மட்டுமே முதலுக்கு மோசமில்லாத வசூலை பெற்றது.
குஷி படத்தை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா... கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக கை கோர்த்த திரைப்படம் 'ஃபேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் தற்போதைய சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு, ரோகிணி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 5-ஆம் தேதி 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வெளியான நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஒட்டு மொத்தமாக பாக்ஸ் ஆபிசில் 19 கோடி மட்டுமே வசூல் செய்து, ஒரே வாரத்தில் திரையரங்குகளில் வாஷ் அவுட் ஆனது.
விஜய் தேவரகொண்டாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய ட்ரா பேக்காக இப்படம் அமைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஏப்ரல் 26, அதாவது நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் மனதை கவராத ஃபேமிலி ஸ்டார்... ஓடிடி ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.