பெத்த தாய் செய்யுற வேலையா இது.. 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை.. நாடகமாடிய கொடூர பெண்.. சிக்கியது எப்படி?
2 வயது ஆண் குழந்தையை பெற்ற தாயே துடிதுடிக்க கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கந்தன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்தி (27). இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகல்யா பண்ருட்டி அடுத்த ஒறையூரில் உள்ள தாய் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை 10 மணிக்கு குழந்தை சசிதரனுக்கு இட்லி ஊட்டியதாகவும் 12 மணிக்கு வந்து பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் குழந்தை இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை தூக்கி சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு மருத்துவர் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் தாயிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை ஷால் துணியால் இறுக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக போலீசாரிடம் அகல்யா அளித்த வாக்குமூலத்தில்;- சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டு இப்படி சீரழிந்து விட்டாள் என்று அக்கம் பக்கத்தினர் பேசியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வெளியில் வேலைக்கு சென்று வருவதற்கும் குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.