Wayanad : வயநாட்டில் இருந்து புறப்பட்ட ராணுவம்.! கேரள மக்களிடம் எங்கள் இதயங்களை விட்டு செல்வதாக நெகிழ்ச்சி
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், இன்னும் 100க்கும் மேற்பட்டவர்களின் நிலை தெரியாமல் உள்ளது. இந்தநிலையில் கடந்த 9 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் வயநாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
Wayanad vilangad landslide
வயநாடு நிலச்சரிவு
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் அவ்வப்போது இயற்கை தனது கோர முகத்தை காட்டும். இந்தாண்டு பருவமழையின் போது இதுவரை இல்லாத வகையில் வயநாட்டில் தனது முழு முகத்தை காட்டியது. இதனால் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டைமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மண்ணில் புதைந்த மனித உயிர்கள்
நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகியது. ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். முதலில் 7 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தது. பல இடங்களில் மனித உடல் பாகங்களே கிடைத்தது. இந்தநிலையில் சூரல்மலை மற்றும் முண்டகை கிராமங்களுக்கு இடையில் இருந்த பாலத்தை நிலச்சரிவு முற்றிலுமாகச் சிதைத்தது. இதனால் முண்டகை கிராமம் தனியாக துண்டிக்கப் பட்டது.
Wayanad landslide Bailey Bridge
களம் இறங்கிய ராணுவம்
இதனையடுத்து களத்தில் இறங்கிய ராணுவம் மீட்பு பணிக்காக 24-க்ளாஸ் பாலத்தைக் அமைத்தனர். இந்த பாலம் இரும்பால் கட்டப்பட்டது. இது 24 டன் அளவு வரைஎடையைத் தாங்கும் வகையில் கட்டினர். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் என்ஜினியரிங் குழுவும், பொறியியல் பணிக்குழுவும் சேர்ந்து இந்த இரும்புப் பாலத்தைக் கட்டிமுடித்தனர். இதனையடுத்து தான் முண்டகை பகுதியில் மீட்பு பணி தொடங்கியது.
இரவு பகல் பாராமல் மீட்பு பணி
இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் தீவிரமாக ராணுவத்தினர் பங்காற்றினர். ஆற்றில் சிதைந்து கிடந்த மனித உடல்களை தேடி, தேடி கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சரியான உணவு கூட இல்லாமல் உழைத்த ராணுவத்தினரின் பங்கு மிகப்பெரியது. இந்தநிலையில் கடந்த 9 நாட்களாக மீட்பு பணியில் இருந்து ராணுவத்தினர் நேற்று மாலையோடு திரும்பி சென்றனர். தேசிய கீதம் பாடி வழியனுப்பி வைக்கப்பட்டது. அப்போது ராணுவத்தினர் கூறுகையில் நாங்கள் இந்த இடத்தை விட்டு சென்றாலும் எங்கள் இதயம் கேரள மக்களிட் விட்டு செல்வதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
விடைபெற்று சென்ற ராணுவம்
வழியனுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கேரள அமைச்சர் முகமது ரியாஸ், மீட்பு பணிக்காக இத்தனை நாட்களாக உடலும் உள்ளமுமாக இருந்த ராணுவத்தினர் எங்களை விட்டுச்செல்வது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். ராணுவம் தங்களது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ராணுவம் வந்த பிறகு ஒரு உயிர் கூட போகாமல் பார்த்துக்கொண்டதாக தெரிவித்தார்.