R.M.Veerappan: எம்ஜிஆர் நடித்த தெய்வ தாய் முதல் ரஜினியின் பாட்ஷா வரை! பல படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்!
பிரபல தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய முதுமை காரணமாக சற்று முன் காலமானார். அவருக்கு வயது 98.
எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர் பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக தன்னுடைய பணியை துவங்கியவர். பின்னர் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சொந்தமாக சினிமா நிறுவனம் ஒன்றை துவங்கிய போது, அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மெல்ல மெல்ல திரைப்படம் தயாரிக்கவும் தொடங்கினார்.
அந்த வகையில் இவர் 1964 ஆம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜாதேவி, எம் என் நம்பியார், ஆகியோர் நடித்த 'தெய்வ தாய்' படத்தை தயாரித்தார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 1966 இல் மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து 'நான் ஆணையிட்டால்' படத்தை தயாரித்தார். இந்த படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக சரோஜாதேவி, கே ஆர் விஜயா, ஆகியோர் நடித்திருந்தனர். அடுத்தடுத்து எம்ஜிஆரை வைத்து, காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி, போன்ற ஹிட் படங்களை தயாரித்தார்.
அதோடு மட்டுமின்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான ராணுவ வீரன், 1982 ஆம் ஆண்டு வெளியான மூன்று முகம், 1983 இல் வெளியான தங்க மகன், 1995 ஆம் ஆண்டு வெளியான பாஷா உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
Kamalhaasan
மேலும் கமலஹாசனையும் வைத்து காக்கி சட்டை, ஊர்காவலன், காதல் பரிசு, போன்ற படங்களை தயாரித்தார். சத்யராஜ், அர்ஜுன், பிரஷாந்த், போன்ற பல நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், கடைசியாக 2006 ஆம் ஆண்டு பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு, ஆகியோர் நடிப்பில் வெளியான 'என் மகன்' படத்தை தயாரித்தார். இதுவே அவர் தயாரித்த கடைசி திரைப்படம் ஆகும்.
திரைப்பட தயாரிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் தன்னுடைய ஆளுமையை செலுத்தியவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், ஜானகி அணியிலும், அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவில் பணியாற்றினார். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையிலும் இடம் பிடித்தார் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து செயல்பட்டார். கருணாநிதி மறையும் வரை அவரது மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவராக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கமலஹாசன், ரஜினிகாந்த், ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமான மனிதர்களில் ஒருவராக இருந்த ஆர் எம் வீரப்பன், பல வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், உடல் நலம் இன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள், மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.